Skip to content
Home » கோர்ட் அவமதிப்பு வழக்கு……..நடிகர் இளவரசு மன்னிப்பு கேட்டார்….

கோர்ட் அவமதிப்பு வழக்கு……..நடிகர் இளவரசு மன்னிப்பு கேட்டார்….

தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கம் கடந்த 2018-ஆம் ஆண்டு சங்கத்தின் முன்னாள் ஊழியர்களுக்கு எதிராக தியாகராயர் நகர் காவல் நிலையத்தில் நிதி முறைகேடு தொடர்பாக புகாரளித்திருந்தது. இந்த புகார் தொடர்பான விசாரணையை விரைவில் முடித்து இறுதி அறிக்கையை நான்கு மாதங்களில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீசாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், அந்த உத்தரவின் அடிப்படையில் காவல்துறையினர் குறிப்பிட்ட விசாரணையை முடிக்கவில்லை என்று ஒளிப்பதிவாளர் சங்கத்தின் சார்ப்பில் அதன் செயலாளரும் நடிகருமான இளவரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு கடந்த டிசம்பர் 12-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது நடிகர் இளவரசு காவல்நிலையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் அது தொடர்பான கண்காணிப்பு கேமராக்கள் காவல் நிலையத்தினரால் சமர்பிக்கப்பட்டது. இதற்கு இளவரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து 13-ம் தேதி தான் வாக்குமூலம் அளித்ததாகவும் 12-ம் தேதி மாமல்லபுரத்தில் படப்பிடிப்பில் இருந்ததாகவும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் அனைத்தும் போலியானவை என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து குறிப்பிட்ட தேதியில் நடிகர் இளவரசு எங்கே இருந்தார் என்பதற்கான மொபைல் லோகேஷன்களையும் மற்றும் அழைப்புகள் தாக்கல் செய்யப்பட்டது. காவல் துறை சமர்ப்பித்த ஆவணங்களை ஆய்வு செய்த நீதிபதி நடிகர் இளவரசு 12-ம் தேதி காவல் நிலையத்தில் ஆஜரானதாக கூறி மன்னிப்பு கோரினால் அதை ஏற்க தயாராக இருப்பதாக தெரிவித்து காவல்துறை தாக்கல் செய்த விவரங்களுக்கு விளக்கமளிக்குபடி உத்தரவிட்டார்.

இந்நிலையில், இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தவறான தகவல்களை அளித்ததற்காக இளவரசு சார்பில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி காவல்துறை நிலைபாடு என்ன என்ற கேள்வியை எழுப்பினார். மன்னிப்பு கேட்டதால் இந்த விவகாரத்தை கைவிடுவதில் ஆட்சேபணை இல்லை என்று காவல்துறை தரப்பு வழக்கறிஞர் கூறினார். மேலும், தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்க முறைகேடு புகார் 2018-ஆம் ஆண்டு அளிக்கப்பட்ட நிலையில் அதன் மீது இன்னும் முழுமையான விசாரணை நடத்தி முடிக்கவில்லை என்ற அதிருப்தியை நீதிபதி பதிவு செய்தார்.

தொடர்ந்து, இளவரசு புகார் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை காவல்துறையினர் சாதாரணமாக எடுத்துக் கொண்டுள்ளனர். நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் உரிய நடவடிக்கை எடுக்காததால் 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2023-ம் ஆண்டு செப்டம்பர் வரை பாண்டிபஜார் காவல் நிலைய குற்றப்பிரிவில் காவல் ஆய்வாளர்களாக இருந்த அனைவரும் பிப்ரவரி 5-ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!