ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணை திறப்புக்கு முன்னர் தஞ்சை வேளாண் வல்லுனர் குழு என்ற அமைப்பு, விவசாயிகளுக்கும், வேளாண் பெருமக்களுக்கும் ஆலோசனைகள் வழங்கும். தண்ணீரை எப்படி சிக்கனமாக பயன்படுத்த வேண்டும், அணையை எப்போது திறக்க வேண்டும். என்னென்ன விதைகள் சாகுபடி செய்யலாம் என்பது உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை அந்த அமைப்பு தெரிவித்து வருகிறது.
அந்த வகையில் தஞ்சையில் இன்று வேளாண் வல்லுனர் குழுவினர் பல்வேறு பரிந்துரைகள் அளித்தனர். மூத்த வேளாண் வல்லுநர் குழு தலைவர் கலைவாணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
மேட்டூர் அணையில் தற்போது 75 டி.எம்.சி நீர் இருப்பு உள்ள நிலையில் அடுத்த மாதம் (ஜூன்) 12-ந்தேதி மேட்டூர் அணை பாசனத்திற்காக திறக்கப்படும் என்று அறிவித்த முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கிறோம். விவசாயிகள் குறுவை சாகுபடியை நேரடி நெல் விதைப்பு மூலம் செய்து கூடுதல் மகசூல் பெறலாம். நிலத்தடி நீர் வசதி உள்ள விவசாயிகள் அணை திறப்பதற்கு முன்னதாகவே நடவு பணிகளை தொடங்க வேண்டும்.
சிக்கனமாக நீரை பயன்படுத்தினால் 5 லட்சம் ஏக்கர் பரப்பில் குறுவை சாகுபடியும், 9 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடியும் செய்திட முடியும். 13 மாவட்டங்களில் சுமார் 5.2 லட்சம் ஏக்கரில் குறுவையும், 9.2 லட்சம் ஏக்கரில் சம்பாவும், 4.4 லட்சம் ஏக்கரில் தாளடியும் சாகுபடி செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி177.75டி.எம்.சி தண்ணீர் கிடைத்தாலும் சாகுபடி முழுமை பெற 237.2 டி.எம்.சி. தேவைப்படும்.
இந்நிலையில், 18.8 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்தால் குறைந்தது 330 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படும்.
எனவே, மேட்டூர் அணை திறப்பதற்கு முன்பாக குறுவை சாகுபடி செய்பவர்கள் நிலத்தடி நீரை பயன்படுத்தி 4.2 லட்சம் ஏக்கரில் நடவு செய்ய வேண்டும் என விவசாயிகளை கேட்டுக்கொள்கிறோம்.
இதேபோல், சம்பா சாகுபடியில் சுமார் 5 லட்சம் ஏக்கரில் நேரடி நெல் விதைப்பு முறையில் சாகுபடி செய்ய வேண்டும். இப்படி சாகுபடி செய்யும் பட்சத்தில் 237.2 டி.எம்.சி. தண்ணீரை வைத்து சாகுபடி செய்து முடிக்கலாம்.
குறுவை சாகுபடிக்கு அடுத்த மாதம் (ஜூன்) 30-க்குள் விவசாயிகள் நாற்று நட்டு விட வேண்டும். ஜூலை மாதத்தில் நெல் நாற்று விட்டு நடவு நட்டால் வடகிழக்கு பருவமழை தொடக்கமான அக்டோபர் மாதத்தில் அறுவடை பாதிப்பை சந்திக்கும்.
சம்பா சாகுபடிக்கு ஆகஸ்ட் 15-ந்தேதிக்கு பிறகு நாற்று விட வேண்டும்.நேரடி நெல் விதைப்பு முறையை கையாளும்போது நெல் விதையின் அளவு, நாற்று பறிப்பு செலவு, நடவு கூலி, மகசூல் என ஏக்கருக்கு ரூ.12 ஆயிரம் சாகுபடி செலவு குறைகிறது.
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி கர்நாடக அரசு வழங்க வேண்டிய தண்ணீரை தமிழக அரசு முறையாக பெற்றுத்தர வேண்டும் என விவசாயிகள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது விதைச்சான்று துறை இயக்குனர் (பணிநிறைவு) வெங்கடேசன், வேளாண்மை துணை இயக்குனர் (பணிநிறைவு) பழனியப்பன், வேளாண்மை இணை இயக்குனர் (பணிநிறைவு) கலியமூர்த்தி உடன் இருந்தனர்.