திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தின் போது, அதிமுக பிரமுகரால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் புலிவலம் அருகே உள்ள வளையப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தனலட்சுமி. அதே பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் அதிமுக பிரமுகராக உள்ளார். இவர் தனலட்சுமியிடமிருந்த டிராக்டரை வாடகைக்கு எடுத்துக்கொண்டு, அதற்கான வாடகைப் பணத்தைத் தருவதாகக் கூறியுள்ளார். மேலும், தனலட்சுமியிடம் இருந்த $2 \frac{1}{2}$ பவுன் நகையையும் அவசரத் தேவைக்காகப் பெற்றுக்கொண்டு, அதற்குரிய தொகையுடன் நகையைத் திரும்பத் தருவதாகக் கூறியுள்ளார்.
ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளாக நகையையும் தராமல், டிராக்டரையும் ஒப்படைக்காமல் செந்தில்குமார் காலம் கடத்தி வந்துள்ளார். இது குறித்துப் பாதிக்கப்பட்ட தனலட்சுமி கடந்த மூன்று ஆண்டுகளாக மாவட்ட நிர்வாக அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும், எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த தனலட்சுமி, இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வந்து, தனது டிராக்டர் மற்றும் நகைகளை மீட்டுத் தரக் கோரி திடீரென தீக்குளிக்க முயன்றார். அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் உடனடியாக அவரைத் தடுத்து மீட்டு, சிகிச்சைக்காகத் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றது அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

