இன்னும் தேர்தலுக்கு 6,7 மாதங்கள் உள்ள நிலையில் முன்னாள் புதிய கூட்டணி அமையலாம் அல்லது இருக்கும் கூட்டணியில் இருந்து விலகலாம் கூட்டணி அமைப்பதற்கு இன்னும் கால அவகாசம் இருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி அருகே தருவைகுளத்தில் நடந்த அதிமுக முகவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு, “வரும் சட்டசபை தேர்தலுக்காக முதன் முதலில் தேர்தல் களத்திற்கு வந்த இயக்கம் அதிமுக. மக்கள் மன்றத்தை மட்டும் நம்பி இதுவரை 154 தொகுதிகளில் அதிமுக பொது செயலாளர் பழனிச்சாமி பிரச்சாரத்தை நிறைவு செய்துள்ளார். மக்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. எங்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை உள்ளது. இன்னும் தேர்தலுக்கு 6, 7 மாதங்கள் உள்ள நிலையில் புதிய கூட்டணி அமையலாம் அல்லது அதிமுக இருக்கும் கூட்டணியில் இருந்து விலகலாம் அதற்கு இன்னும் கால அவகாசம் இருக்கிறது. திமுகவுக்கும் த.வெ.க.வுக்கும் இடையே இரண்டாவது இடத்தை பிடித்து யார் எதிர்க்கட்சியாக வருவார்கள் என்று தான் போட்டி உள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிச்சாமிதான் முதல்வர் என்பதை மக்கள் முடிவு செய்து விட்டார்கள். டிடிவி தினகரன் நிலைப்பாடு பற்றி எங்களுக்கு கவலை இல்லை. நான்கு ஆண்டு காலம் நல்ல ஆட்சி கொடுத்த பழனிச்சாமியை மக்கள் முதல்வராக முடிவு செய்துவிட்டனர். நிழலின் அருமை வெயிலுக்குள் சென்றால்தான் தெரியும் என்பது போல அதிமுக ஆட்சியின் நன்மையை மக்கள் புரிய துவங்கி உள்ளனர். திமுக ஆட்சிக்கு முடிவு கட்டும் தேர்தலாக 2026 தேர்தல் இருக்கும். காங்கிரஸ் தலைவர் செல்லப்பெருந்தகை திமுகவின் தவறை சுட்டிக்காட்டவில்லை. காங் மாவட்ட தலைவர் படுகொலை செய்யப்பட்டு ஓராண்டு ஆகியும் இதுவரை கொலையாளிகள் கண்டுபிடிக்கவில்லை, கொலைக்கான காரணம் கண்டுபிடிக்கவில்லை. அதையெல்லாம் கேட்காத செல்வபெருந்தகைக்கு அதிமுக பற்றி பேச அருகதை இல்லை. காங்கிரஸ் கட்சியை திமுக விழுந்த பார்க்கிறது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார். அதை நிரூபணம் செய்யும் வகையில் காங்கிரஸ் மாவட்ட மகளிர் அணி தலைவியை திமுகவில் சேர்த்துள்ளனர். காங்கிரஸ்காரர்கள் எச்சரிக்கையாக இருந்தால் சரியாக இருக்கும்” என்றார்