Skip to content

வழக்கறிஞரிடம் பணத்தை வாங்கி ஏமாற்றிய அதிமுக ஊ.ஒ.குழுத்தவைர் கைது..

தூத்துக்குடியை சேர்ந்த பிரின்ஸ் கிப்ஸன் என்பவர் கரூர் மாவட்டம், கரூர் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோதூரில் சுமார் 07 ஏக்கர் நிலம் வாங்குவது தொடர்பாக கரூரைச் சேர்ந்த R.S. ராஜா என்ற நில தரகரிடம் முன்பணம் ரூ. 96,00,000/- கொடுத்து ஒரு மாத காலத்திற்குள் கிரையம் செய்துவிடுவதாக கூறியவர், கிரையம் செய்ய காலதாமதம் செய்ததால் நில உரிமையாளர்கள் அந்த நிலத்தை வேறு ஒருவருக்கு விற்றுவிட்டனர். இதனால் மேற்படி பணம் ரூ. 96,00,000/- த்தை திரும்ப பிரின்ஸ் கிப்ஸனிடம் கொடுத்தபோது அவர் அதை வாங்க மறுத்து தனக்கு பணம் வேண்டாம், நிலம்தான் வேண்டும் என்று தென்மாவட்டத்தை சேர்ந்த முக்கிய நபர் ஒருவரை அழைத்து வந்து மத்தியஸ்தம் செய்துள்ளார். அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.

இதையறிந்த கரூர் வாங்கலை சேர்ந்த அதிமுகவை சேர்ந்த முன்னாள் கரூர் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் பாலமுருகன் என்பவர் தான் இந்த விஷயத்தை முடித்து தருவதாக R.S. ராஜாவிடம் கூறி மேற்படி தொகை ரூ. 96,00,000/- த்தை தன்னிடம் கொடுக்கும்படியும், தான் பிரின்ஸ் கிப்ஸனிடம் கொடுத்து பிரச்சனையை முடித்து தருவதாக கூறியுள்ளார். அதனால் மேற்படி பாலமுருகனை நம்பி, R.S. ராஜா கரூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றிவரும் ரகுநாதன் என்பவர் மூலமாக பணம் ரூ. 96,00,000/- கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட பாலமுருகன் மேற்படி தொகையை பிரின்ஸ் கிப்ஸனிடம் கொடுக்காமல் தானே வைத்துக்கொண்டார்.

இதையறிந்த வழக்கறிஞர் ரகுநாதன் பாலமுருகனிடம் மேற்படி பணம் ரூ. 96,00,000/- த்தை பிரின்ஸ் கிப்ஸனிடம் கொடுக்கவில்லை என்றால் தன்னிடம் திருப்பி தருமாறு பலமுறை கேட்டும் பாலமுருகன் பணத்தை திருப்பி தரமுடியாது, உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள் என்று கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக வழக்கறிஞர் ரகுநாதன் என்பவர் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா, IPS., கொடுத்த புகாரின் பேரில் கரூர் மாவட்ட குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, வழக்கின் எதிரியான பாலமுருகனை இன்று காலை கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். மேலும் இவ்வழக்கு சம்மந்தமாக புலன்விசாரணை நடைபெற்றுவருகிறது.

error: Content is protected !!