Skip to content

அலையாத்தி காடுகள் மாநாடு 2025:  ஒப்பந்தங்கள் கையெழுத்து

தமிழ்நாடு அரசின் முதல் அலையாத்திக் காடுகள் மாநாடு மகாபலிபுரத்தில் உள்ள கல்டான் சமுத்ரா எனும் விடுதியில் இன்று நடைபெற்றது. முன்னெப்போதும் இல்லாத அளவில் கொள்கை வகுப்பாளர்கள், ஆய்வாளர்கள், சமூகத் தலைவர்கள் மற்றும் பன்னாட்டுத் தோழமை அமைப்புகள் மாநாட்டில் கலந்து கொண்டன. 

இந்நிகழ்வின் தொடக்க விழாவின்போது, வனம் மற்றும் கதர்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், நம் மாநிலத்தின் புதிதாக நடவு செய்யப்பட்ட மற்றும் மீட்டுருவாக்கம் செய்யப்பட்ட அலையாத்திக் காடுகள் குறித்த,”தமிழ்நாட்டின் அலையாத்திப் பயணம்” எனும் விரிவான அறிக்கையினை வெளியிட்டார். அதனை தொடர்ந்து இந்தியாவிற்கான ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்ட (UNEP) தலைவர், பாலகிருஷ்ண பிசுபதி, மரு. சௌமியா சுவாமிநாதன், எரிக் சோல்ஹெய்ம், நிர்மலா ராஜா, முனைவர். ரமேஷ் ராமச்சந்திரன், கோ. சுந்தர்ராஜன் மற்றும் முனைவர். ஆ. கலையரசன் உள்ளிட்ட தமிழ்நாட்டின் காலநிலை மாற்றத்திற்கான ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்கள் ஆகியோர் இந்நிகழ்வின்போது, தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.

மேலும் இந்நிகழ்வின் துவக்கவிழாவின்போது, இரண்டு முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை ஆகிய துறைகளுக்கும் ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்ட (UNEP)-த்திற்கும் இடையே உள்ள ஒத்துழைப்புகளின் நீட்டிப்பிற்கான புதுப்பிக்கப்பட்ட ஒப்பந்தம் முதலில் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் நிலையான நகர்ப்புற வெப்பக்குறைப்பு, அதீத வெப்பநிலைகளை எதிர்கொள்வதற்கான திட்டங்கள், காலநிலை மீள்திறன்மிகு விளிம்புநிலைச் சமூகங்களுக்கான வெப்பக்குறைப்பு உட்கட்டமைப்பு உருவாக்கம் போன்ற திட்டங்களில் கவனம் செலுத்தப்படும். மேலும் இவ்வொப்பந்தமானது, முக்கியத்துவம் மிக்க புதிய துறைகளான, நெகிழிக் கழிவு மேலாண்மை, சுழல் பொருளாதாரம், காற்றின் தர மேலாண்மை, பசுமைப் பணிவாய்ப்புகள் மற்றும் நீலப்பொருளாதார முன்னெடுப்புகளிலும் ஒத்துழைப்புகளை நல்கும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை மற்றும் எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளைக்குமிடையே, தமிழ்நாடு முழுவதும் காலநிலை மீள்திறன் மற்றும் தகவமைப்பினை திறன் வளர்ப்பு மற்றும் காலநிலைக் கல்வியறிவு முன்னெடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், அதேவேளையில் அடிப்படைக் கள ஆய்வுகள் மூலமும், அலையாத்திக் காடுகள், கடற்புற்கள், பவளப்பாறைகள் மற்றும் சமூகம் சார்ந்த சூழல்-வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதன் மூலம் கடலோர மற்றும் கடல்சார் பாதுகாப்பினை வலுப்படுத்த ஆவன செய்யவும் ஒப்பந்தம் கையெழுத்தானது. இவ்வொருங்கிணைப்புகள் அறிவியல் ஆய்வுகள், கொள்கைகள் மற்றும் சமூக பங்கேற்புடன் அலையாத்திக் காடுகளை மீட்டுருவாக்கம் செய்வதை நோக்கமாகக் கொண்டு செயல்படுத்தப்படும்.

நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் பேசியதாவது:- முதல்-அமைச்சரின் வழிகாட்டுதலின்படி, கடலோர சூழல் அமைப்புகளைப் பாதுகாக்கும் அதேவேளையில் அதனைச் சார்ந்துள்ள மக்களின் வாழ்வாதாரங்களும் மேம்படுத்தப்படும் எனவும், இயற்கையைப் பாதுகாக்க அறிவியல், அரசு நிர்வாகம் மற்றும் சமூகங்கள் ஒன்றிணைந்திருக்கும் இந்நிகழ்வானது தமிழ்நாட்டின் தலைமைத்துவத்திற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது எனத் தெரிவித்தார்.

 

error: Content is protected !!