Skip to content

ஆம்னி பஸ் விவகாரத்தில் அரசு உரிய முடிவு எட்டும் வரை போராட்டம் தொடரும்

  • by Authour

தமிழ்நாடு பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களில் வரி விதிக்கப்பட்டதை தொடர்ந்து வெளி மாநிலங்களுக்கு ஆம்னி பேருந்துகளை இயக்க மாட்டோம் என தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் இன்று தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரை நேரில் சந்தித்து தனியார் ஆம்னி பேருந்துகள் உரிமையாளர் சங்கத்தினர் மனு ஒன்றை அளித்துள்ளனர்.

அதில் வெளி மாநிலங்களில் வரி விதிக்கப்படும் நடவடிக்கைக்கு தமிழ்நாடு அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதுவரை தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்து எதுவும் பிற மாநிலங்களுக்கு இயக்கப்படாது என்று தெரிவித்துள்ளனர்.

மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இந்த விவகாரத்தில் போக்குவரத்து துறை அதிகாரிகளோடு கலந்து ஆலோசித்து விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதாக தெரிகிறது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தனியார் ஆம்னி பேருந்துகள் உரிமையாளர் சங்க பொதுச் செயலாளர் மாறன்,
தமிழ்நாட்டில் ஏறக்குறைய 700-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் உள்ளன. இந்த வரி விதிப்பால் எங்களால் பேருந்துகளை இயக்க முடியாத சூழல் உள்ளது. கேரளா அரசு ஏறக்குறைய ஒரு லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் வரி விதிப்பில் ஈடுபடுகிறது. கர்நாடகா மாநில அரசும் 2 லட்சம் ரூபாய் அளவிற்கு ஆம்னி பேருந்துகளுக்கு வரி விதித்துள்ளது. எனவே தங்களால் பேருந்துகளை இயக்க முடியாத சூழல் உள்ளது.
மேலும் வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு தமிழ்நாடு அரசு வரி விதித்ததை தொடர்ந்து, தற்பொழுது பிற மாநில அரசுகளும் இந்த நடவடிக்கையை பின்பற்றுகிறது. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்றைய தினம் அமைச்சரை சந்தித்து மனு அளித்துள்ளோம். நாளை போக்குவரத்து ஆணையரை சந்தித்து மனு அளிக்க இருக்கின்றோம்.
உரிய தீர்வு கிடைக்கும் வரை ஆம்னி பேருந்துகள் வெளிமாநிலங்களுக்கு இயக்கப்படாது என தெரிவித்தார்.

error: Content is protected !!