கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட படிக்கட்டுத் துறையை சார்ந்தவர் சுப்பிரமணி (வயது 60). உணவகத்தில் மாஸ்டராக வேலை பார்த்து வந்த அவருக்கு கை முறிவு ஏற்பட்டதால் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது.
நேற்று இரவு லைட்ஹவுஸ் கார்னர் பகுதியில் அமர்ந்திருந்துள்ளார்.
வஞ்சியம்மன் கோவில் தெருவை சார்ந்த சரண்ராஜ் (வயது 18) பெயிண்டர் வேலை செய்து வருகிறார்.
இவரது நண்பர் மக்கள் பாதையில் வசிக்கும் நித்தீஸ் (வயது 17) பஸ்பாடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர்கள் இருவரும் நள்ளிரவில் மது குடித்து விட்டு லைட்ஹவுஸ் கார்னர் பகுதியில் அதிகாலை 2 மணியளவில் சுற்றிச் திரிந்துள்ளனர்.
அப்போது,சுப்பிரமணி அவர்களை பார்த்து சின்ன பசங்களா இருக்கிறீங்க நள்ளிரவில் எங்கு சுற்றிக் கொண்டிருக்கிறீர்கள் என கேட்டதாக சொல்லப்படுகிறது. அப்போது ஏற்பட்ட தகராறில் இளைஞர்கள் இரண்டு பேரும் சேர்ந்து முதியவரை தாக்கியுள்ளனர். அப்போது, அந்த வழியாக ரோந்து சென்ற போலீசார் சண்டையை தடுத்ததுடன், முதியவரை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து முதியவர் உடல் பிரேத பரிசோதனைக்காக பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. மதுபோதையில் இருந்த 2 இளைஞர்களையும் கரூர் நகர காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக இருவருக்கும் வயது குறைவு என்பதால் பெயரை பயன்படுத்த வேண்டாம்.