Skip to content

ஆந்திரா அதிரடி: அதிக குழந்தைகள் பெற்றால் பணப்பரிசு

ஆந்திராவில் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றால் ரூ.25,000 நிதி உதவியை சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் அரசு துறையில் பணிபுரியும் பெண்களுக்கு 12 மாத ஊதியத்துடன் விடுமுறை என ஆந்திர அரசு அறிவித்துள்ளது. ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் குறைந்து வரும் பிறப்பு விகிதம் மற்றும் அதிகரித்து வரும் முதியோர் மக்கள்தொகை ஆகிய சவால்களைச் சமாளிக்க, ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஒரு புரட்சிகரமான மக்கள்தொகை மேலாண்மைக் கொள்கையை அறிவித்துள்ளார். இந்தக் கொள்கையின் கீழ், அதிக குழந்தைகளைப் பெற்றெடுக்கும் தம்பதிகளுக்குப் பல்வேறு நிதியுதவிகள் மற்றும் சலுகைகளை அரசு வாரி வழங்கி உள்ளது.

இரண்டாவது அல்லது மூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிகளுக்குத் தலா ரூ. 25,000 ஒருமுறை நிதியுதவியாக வழங்கப்படும். மூன்றாவது குழந்தையின் ஊட்டச்சத்து மற்றும் பராமரிப்புச் செலவுகளுக்காக, அக்குழந்தைக்கு 5 வயது ஆகும் வரை மாதம் ரூ. 1,000 வீதம் என மொத்தம் 60 மாதங்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும். 18 வயது வரை குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்க ஏற்பாடு செய்யப்படும். மக்கள்தொகை பெருக்கத்தை ஊக்குவிக்க அரசு ஊழியர்களுக்குக் கூடுதல் சலுகைகளை முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். தாய்மார்களுக்கு 12 மாதங்கள் (ஒரு வருடம்) சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு. தந்தைமார்களுக்கு 2 மாதங்கள் தந்தைவழி விடுப்பு.

கூடுதல் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் ஊழியர்களுக்குப் பதவி உயர்வுகளில் முன்னுரிமை அளிப்பதற்கான சட்டத் திருத்தங்களும் ஆலோசிக்கப்பட்டு வருகின்றன. ஆந்திராவின் மொத்தக் கருவுறுதல் விகிதம் (Total Fertility Rate) தற்போது 1.5 ஆகக் குறைந்துள்ளது. இது மக்கள்தொகையை நிலையாக வைத்திருக்கத் தேவையான 2.1 என்ற அளவை விட மிகவும் குறைவு. இதனால், 2047-ம் ஆண்டிற்குள் ஆந்திரா ஒரு “வயதான மாநிலமாக” மாறும் அபாயம் உள்ளதால், இளைஞர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முதலமைச்சர் இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. அரசின் இந்த அதிரடி சலுகையால் பெற்றோர்கள் குதூகலம் அடைந்துள்ளனர். இனி ஆந்திராவில் எந்த வீட்டில் பார்த்தாலும் குவா குவா என்ற சத்தம் ஒலித்துகொண்டே இருக்கும் என சமூக வலைதளங்களில் கூறப்படுகிறது.

error: Content is protected !!