Skip to content

பலாத்கார வழக்கு: ஞானசேகரன் குற்றவாளி…. ஜூன் 2ல் தண்டனை அறிவிப்பு

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில்  பொறியியல்  2ம் ஆண்டு மாணவி ஒருவர் கடந்த ஆண்டு டிசம்பர் 23ம் தேதி  பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்.  இது குறித்து பாதிக்கப்பட்ட அந்த மாணவி மறுநாள்  சென்னை கோட்டூர்புரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.  பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார்,  அதேபகுதியில் பிரியாணி கடை நடத்தி வந்த கோட்டூரைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவரை  உடனடியாக  கைது செய்தனர்.

கண்காணிப்பு காமிரா மூலம்  ஞானசேகரன்  சிக்கினார். இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து கடந்த டிச.28 அன்று உத்தரவிட்டது. இந்நிலையில் ஞானசேகரனை குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க சென்னை காவல் ஆணையர் கடந்த ஜன.5 அன்று உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் கடந்த பிப்.24 அன்று சைதாப்பேட்டை 9-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஞானசேகரனுக்கு எதிராக 100 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதன்பிறகு இந்த வழக்கு விசாரணை கடந்த மார்ச் 7-ம் தேதியன்று சென்னை மகளிர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
தனக்கு எதிராக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தவறானது என்றும், ஆதாரங்கள் இல்லாமல் தனக்கு எதிராக குற்றச்சாட்டுகளை போலீஸார் சுமத்தியுள்ளதால், இந்த வழக்கில்
இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் எனக்கோரி ஞானசேகரன் தரப்பில் தாக்கல் செய்த மனுவை மகளிர் நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 8-ம் தேதியன்று தள்ளுபடி செய்தது. அன்றைய தினமே குற்றச்சாட்டுகளையும் பதிவு செய்தது.

அதில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடல், ஆதாரங்களை அழித்தல், கல்லூரி மாணவியை சட்டவிரோதமாக கட்டுப்பாட்டில் வைத்திருந்து மிரட்டி நிர்வாணப்படுத்துதல், புகைப்படம் எடுத்து வெளியிடல் போன்ற பாலியல் குற்றங்களுக்காக தகவல் தொழில்நுட்பச் சட்டம், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் பிஎன்எஸ் சட்டத்தின் 12 பிரிவுகளின்கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

அதன்பிறகு இந்த வழக்கில் மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி எம்.ராஜலட்சுமி முன்பாக கடந்த ஏப்.23 அன்று சாட்சி விசாரணை தொடங்கியது. தினந்தோறும்  நடத்தப்பட்ட இந்த விசாரணையில் காவல்துறை தரப்பில் 29 பேர் சாட்சியம் அளித்தனர். ஞானசேகரன் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையில் அரசு தரப்பில் 75 சான்று ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்கின், அனைத்து சாட்சி விசாரணை மற்றும் குறுக்கு விசாரணைகளும் நிறைவடைந்த பின்னர் கடந்த மே 20 முதல் மே 23 வரை இரு தரப்பிலும் 3 நாட்களில் தங்களது இறுதி வாதங்களை நிறைவு செய்தனர்.

காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.பி.மேரி ஜெயந்தி, குற்றம்சாட்டப்பட்ட ஞானசேகரனுக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கபட்டுள்ளதாகவும் அறிவியல் ரீதியான வலுவான ஆதாரங்கள் உள்ளதாகவும் கூறியதுடன் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கில் மே 28-ம் தேதி (இன்று) தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி  அறிவித்திருந்தார். இதற்காக இன்று காலையில்   அரசு வழக்கறிஞர் மேரி  ஜெயந்தி,   மற்றும் குற்றம் சாட்டப்பட்ட ஞானசேனரன் தரப்பு  வழக்கறிஞர்கள் கோதண்டராமன், ஜெயப்பிரகாஷ் நாராயணன்  ஆகிய  இருதரப்பு வழக்கறிஞர்களும் கோர்ட்டுக்கு வந்திருந்தனர்.

சரியாக 10. 15 மணிக்கு ஞானசேகரன் பலத்த பாதுகாப்புடன்  கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டு ஆஜர்படுததப்பட்டார்.10.20 மணிக்கு நீதிபதி கோர்ட்டுக்கு வந்தார்.  அதன்படி இன்று காலை 10.40 மணி அளவில்  இந்த வழக்கில்  நீதிபதி ராஜலட்சுமி  தீர்ப்பை வாசிக்கத் தொடங்கினார்.

மாணவியை பலாத்காரம்  செய்த ஞானசேகரன்   குற்றவாளி என   கூறினார்.   அவர் மீது தொடரப்பட்ட 11  வழக்கு பிரிவுகளிலும் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டுள்ளார் என்றார்.

அதைத்தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக ஏதாவது கூற விரும்புகிறீர்களா என நீதிபதி கேட்டார்.

அப்போது ஞானசேகரன்,  குறைந்தபட்ச தண்டனை வழங்குங்கள். எனக்கு அப்பா இல்லை. வயதான அம்மா,  பெண் குழந்தை உள்ளது .  தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. குடும்ப சூழ்நிலையை  கருதி குறைந்தபட்ச தண்டனை  தரவேண்டும் என்றார்.

அதன்பிறகு  அரசு வழக்கறிஞர் மேரி ,   குற்றவாளி ஞானசேகரனுக்கு உச்சபட்ச தண்டனை தர வேண்டும் , இரக்கம் காட்டக்கூடாது  காட்டுமிராண்டித்தனமான குற்றம் புரிந்துள்ளார் என்றார்.

அதைத்தொடர்ந்து   நீதிபதி ராஜலட்சுமி,   தண்டனை குறைப்பு இல்லாமல்,  ஆயுள் தண்டனை வழங்க சட்டத்தில் இடம் உள்ளதா என  அரசு வழக்கறிஞரிடம்  கேட்டார். பின்னர்  குற்றவாளியான ஞானசேகரனுக்கு தண்டனை  ஜூன் 2ம் தேதி அறிவிக்கப்படும்.  அதுவரை  ஞானசேகரன்  நீதிபதிமன்ற காவலில் வைக்கப்படுவார் என்றும் உத்தரவிட்டார்.  அதைத்தொடர்ந்து ஞானசேகரன்  சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இந்த வழக்கு அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது  என்பதால் கோர்ட்டில்  பலத்த போலீஸ் காவல் போடப்பட்டிருந்தது.

error: Content is protected !!