Skip to content
Home » கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும், நியமன பதவிக்காரர்களின் அடாவடி….. முதல்வர் ஸ்டாலின் கடிதம்

கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும், நியமன பதவிக்காரர்களின் அடாவடி….. முதல்வர் ஸ்டாலின் கடிதம்

  • by Senthil

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்  எழுதியுள்ள  உங்களில் ஒருவன் மடலில் கூறியிருப்பதாவது:

சேலத்தில் டிசம்பர் 17-ம் நாள் இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு – மாநில உரிமை மீட்பு மாநாடாக எழுச்சிமிக்க இளையோரின் புதுப் பாய்ச்சலுடன் நடைபெறவிருக்கிறது.

தாய்க் கழகத்திற்குப் பெயர் சூட்டப்பட்ட சேலம் மாநகரில் இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெறவிருக்கும் நிலையில், உங்களில் ஒருவனான நான் ஒரு தாயின் மனநிலையுடன் காத்திருக்கிறேன். இன்று கழகத்தின் தலைவராக, தமிழ்நாட்டின் முதலமைச்சராக உங்களின் பேரன்புடன் பொறுப்புகளை வகித்தாலும் ஏறத்தாழ 35 ஆண்டுகள் கழக இளைஞரணியை சுமந்தவனல்லவா! அது பிறந்து, தவழ்ந்து, வளர்ந்து, உயர்ந்து நிற்கும் காலம் வரை அதன் வளர்ச்சி ஒன்றே என் சிந்தனையாக, செயல்பாடாக அமைந்தது.

1949-ஆம் ஆண்டு சென்னை ராபின்சன் பூங்காவில் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கி வைத்தார் பேரறிஞர் அண்ணா. அப்போது அவரும் அவரது தம்பிமார்களான தலைவர் கலைஞர், இனமானப் பேராசிரியர், நாவலர் அவர்கள் உள்ளிட்ட அனைவருமே இளைஞர்கள்தான். அவர்கள் அரசியல் களத்தில் வேகத்துடனும் வியூகத்துடனும் செயல்பட்ட காரணத்தால் 18 ஆண்டுகளில் தி.மு.க. தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்தது.

 

ராபின்சன் பூங்காவில் தொடங்கிய இயக்கத்தின் தொடர்ச்சிதான் ஜான்சிராணி பூங்காவில் உருவான இளைஞரணி. “விருப்பமுள்ளவராம் பதவியில் பல பேர்… அவர் வேண்டாம்! நெருப்பின் பொறிகளே! நீங்கள்தாம் தேவை!’ என்று முத்தமிழறிஞர் கலைஞர் தன் 21-ஆம் வயதில் இளைஞராக இருந்தபோது எழுதிய கவிதை வரிகளுக்கேற்ப, கழகத்தின் துணை அமைப்பாகவும், எந்த நெருக்கடியிலும் துணை நிற்கும் அமைப்பாகவும் திகழ்ந்தது இளைஞரணி. தலைவர் கலைஞர் ஆணையிட்டால் ஏவுகணை போல எதிரிக் கூட்டம் நோக்கிப் பாயும் பட்டாளமாக இளைஞரணி செயல்பட்டது.

“ஈட்டியின் முனைகளே.. எழுங்கள்! தீட்டிய கூர்வாட்களே… திட்டமிதோ! கட்டிய நாய்களல்ல நாம்.. எட்டிய மட்டும் பாய்வதற்கு! தட்டிய மாத்திரத்தில் கொட்டம் அடங்க வேண்டும்!” என்ற அவரது கவிதை வரிகளுக்கு நிகராக இளைஞரணியின் பணிகள் தொடங்கின, தொடர்ந்தன.

‘வெட்டி வா என்றால் கட்டி வரக் கூடியவர்கள் என் உடன்பிறப்புகள்’ என்று தலைவர் கலைஞர் அவர்கள் சொல்வார்கள். இளைஞரணி எனும் கொள்கைப் படை வெட்ட வேண்டியதை வெட்டி, அவற்றை முறையாகக் கட்டி, வீச வேண்டிய இடத்தில் வீசிவிட்டு, கடமையை நிறைவேற்றிய வீரர்களாகத் தலைவர் கலைஞர் முன் நிற்கும். எத்தனை மறியல்கள், எண்ணற்ற சிறைவாசங்கள். அத்தனையையும் கொள்கையை வளர்ப்பதற்கான அனுபவ உரமாக ஆக்கிக்கொண்டது இளைஞரணி.

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், இனமானப் பேராசிரியர் ஆகியோர் தமிழ்நாடு முழுவதும் பயணித்து திராவிடக் கொள்கைகளை விதைத்து, நீர் வார்த்து, வளர்த்தவர்கள். அந்த உணர்வை அடுத்த தலைமுறையிடம் ஊட்ட வேண்டும் என்பதற்காகவும், இளைஞரணியின் தலைமை அலுவலகமாக அன்பகம் கட்டடத்தைப் பெறுவதற்கான நிதி திரட்டவும் தமிழ்நாடு முழுவதும் உங்களில் ஒருவனான நான் பயணித்தேன். இளைஞரணியின் துணை அமைப்பாளர்கள் துணை வருவார்கள். கிளைகள்தோறும் கழகத்தின் இருவண்ணக் கொடியேற்றம், படிப்பகங்கள் திறப்பு, கழகத்தினர் வீட்டில் தேநீர் அருந்தி மகிழ்தல், குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுதல், பொதுக்கூட்டம் என ஒவ்வொரு நிகழ்வுமே கொள்கை விளக்கமாக அமையும்.

ஒவ்வொரு நிகழ்விலும் நிதி திரட்டப்படும். அப்படித் திரட்டிய நிதியில்தான், கழகத்தின் பொதுச் செயலாளராகத் திகழ்ந்த இனமானப் பேராசிரியர் அவர்கள் இளைஞரணி, தொ.மு.ச., சென்னை மாவட்டக் கழகம் ஆகியோருக்கிடையே வைத்த ஆரோக்கியமான போட்டியில், அவர் நிர்ணயித்த பத்து லட்ச ரூபாய் என்ற இலக்கைக் கடந்து, 11 லட்ச ரூபாயை நிதியாகத் திரட்டி, தலைமையிடம் அளித்து அன்பகத்தை வசமாக்கியது இளைஞரணி. அன்பான இதயங்கள் கொண்ட தமிழ்நாட்டு மக்களும் நம் வசமாயினர்.

எத்தனையெத்தனை நினைவுகளோ நெஞ்சத்தில் சுழல்கின்றன. தான் வளர்த்த பிள்ளை, தன் தோளுக்கு மேல் வளர்ந்து, தானே தன் கடமைகளை முனைப்புடனும் சிறப்புடனும் நிறைவேற்றும் ஆற்றலைப் பார்த்து மகிழும் தாயின் மனநிலையுடன், தம்பி உதயநிதியையும் அவர் தலைமையிலான இளைஞரணியில் உள்ள ஒவ்வொருவரின் செயலாற்றலையும் கண்டு மகிழ்கிறேன். மாநாடு சிறக்க தாயுள்ளத்துடன் வாழ்த்துவதுடன், தாய்ப் பாசத்துடன் சில அறிவுரைகளை மாநாடு நடைபெறும்வரை அவ்வப்போது இத்தகைய மடல் வாயிலாக வழங்குவேன்.

அரசியல் மாண்புகளையோ மாநில உரிமைகளையோ மதிக்காத ஒன்றிய ஆட்சியாளர்களால் இந்திய அரசியலமைப்புச் சட்டமே ஆபத்துக்குள்ளாகியிருக்கிறது. உச்சநீதிமன்றத் தீர்ப்புகளையும் கூட மதிக்காத நியமனப் பதவிக்காரர்களின் அடாவடிகள் கூட்டாட்சித் தத்துவத்தைச் சிதைக்கின்றன. மதவாத – மொழி ஆதிக்க – மானுட விரோத அரசியல் ஒவ்வொரு மாநில மக்களையும் நடுங்கச் செய்கிறது. இவை எல்லாவற்றுக்கும் எதிரான நல்ல தீர்ப்பை 2024-ம் ஆண்டில் மக்கள் எழுதப் போகிறார்கள். அதற்கான விழிப்புணர்வுப் பரப்புரைதான் இளைஞரணி மேற்கொண்டிருக்கும் இரு சக்கர வாகனப் பேரணி.

கருப்பு-சிவப்பு இளைஞர் படை மக்களிடம் செல்லட்டும். மாநில உரிமைகள் பறிக்கப்படுவதால் நீட் தேர்வு போன்ற கொடூரங்கள் எத்தனை உயிர்களைப் பறித்துள்ளன என்பதை எடுத்துச் சொல்லட்டும். நீட் விலக்கிற்கான அரைக் கோடி கையெழுத்துகளைப் பெறட்டும். ஜனநாயகப் போர்க்களத்தில் வெல்லட்டும்!

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!