அரியலூர் மாவட்டத்தில் 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு
நடைபெறும் மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர்
பொ.இரத்தினசாமி பார்வையிட்டார்.
தமிழ்நாடு முழுவதும் 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு இன்று 02.03.2026 துவங்கி உள்ளது. அந்த வகையில் அரியலூர் மாவட்டத்தில் 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வினை 92 மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 4,302 மாணவர்களும், 4,261 மாணவிகளும் என ஆக மொத்தம் 8,563 மாணவ/மாணவிகள் 47 தேர்வு மையங்களில் தேர்வினை எழுத உள்ளனர். அதே போன்று தனித் தேர்வர்கள் 48 ஆண்களும், 100 பெண்களும் என மொத்தம் 148 நபர்கள் தேர்வினை எழுத உள்ளனர்.
இதில் இன்று நடைபெற்ற 12 ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வினை 4234 மாணவர்களும், 4218 மாணவிகளும் என மொத்தம் 8452 மாணவ மாணவிகள் தேர்வினை எழுதினர். மேலும் 68 மாணவர்களும், 43 மாணவிகளும் என மொத்தம் 111 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை.
தனித்தேர்வர்களில் 43 ஆண்களும், 97 பெண்களும் என மொத்தம் 140 நபர்கள் தேர்வு எழுதினர். மேலும் 5 ஆண்களும், 3 பெண்களும் என மொத்தம் 8 நபர்கள் தேர்வு எழுத வரவில்லை.
அரசு பொதுத்தேர்வினை கண்காணிக்கும் பொருட்டு ஆய்வு அலுவலர்கள் 5 பறக்கும் படையாக அமைத்தும், தேர்வு மையங்களை கண்காணிக்க நிலையான பறக்கும் படை 67 முதுகலை ஆசிரியர்களும், தேர்வு அறை கண்காணிப்பாளர்களாக 463 ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வுப்பணிகள் சார்ந்து தேர்வு நடைபெறும் நாட்களில் குடிநீர் வசதி, மின் விசிறிகள், தடையில்லா மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வழங்கிடவும், மாணவ, மாணவிகள் குறித்த நேரத்தில் தேர்வு மையத்திற்கு தேர்வெழுத ஏதுவாக போதிய பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை உறுதிபடுத்திடவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் தேர்வுகள் அமைதியாக நடைபெற ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் ஒரு ஆயுதம் தாங்கிய காவலர் உட்பட போதிய காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தெரிவித்தார்.
இந்நிகழ்வில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரேணுகோபால், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

