அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சன்னாசிநல்லூர் தெற்குத்தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (71). கோவில் பூசாரி. இவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் (58) என்பவருக்கும் இடையே ஏற்கனவே தீபாராதனை காண்பிப்பது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தநிலையில், கடந்த 28.07.2019 அன்று பெருமாள் வீட்டின் வழியாக ராஜேந்திரன் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பெருமாள் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். மேலும் அங்கிருந்த கட்டையை எடுத்து தாக்க முயற்சி செய்தார். அப்போது ராஜேந்திரன் கட்டையை பிடுங்கி தூர வீசிவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த பெருமாள் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ராஜேந்திரனின் வயிற்றில் குத்தினார்.
இதனை தடுக்க வந்த ராஜேந்திரனின் மகன் தினேஷ் (24) வயிற்றிலும் பெருமாள் கத்தியால் குத்தியுள்ளார். இதில் தினேஷ் குடல் சரிந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதையடுத்து இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுதொடர்பாக தளவாய் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெருமாளை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு அரியலூர் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்து வந்த நீதிபதி மணிமேகலை, தகாத வார்த்தையால் திட்டியதற்கு மூன்று மாதங்கள் சிறை தண்டனை மற்றும் 250/- ரூபாய் அபராதமும், இருவரையும் கத்தியால் குத்தியதற்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 10000/- ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இதனை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து பெருமாள் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.