அரியலூர் நகராட்சிக்குட்பட்ட செட்டி ஏரிக்கரையின் பின்புறம் சுமார் 4 ஏக்கர் அளவிலான நிலம், தற்போது தரிசு நிலமாக மாறி, வீட்டு மனைகளாக உள்ளது.
அந்த இடத்திற்கு முன் பின் காவல்துறைக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்நிலையில் தங்கள் நிலத்திற்கு செல்லும் பொதுப்பாதையை, காவல்துறைக்கு பட்டா மாற்றம் செய்ததாக கூறி பொதுமக்களுக்கு ஆதரவாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் தலைமையில் பாதை மீட்பு போராட்டம் இன்று நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு வருகை தந்த சி.பி.எம் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் மாவட்ட செயலாளர் அக்கட்சியினர் பேருந்து நிலையம் முன்பு திரண்டு ஊர்வலமாக செல்ல முயன்றனர்.
ஊர்வலத்திற்கு அனுமதி மறுத்த காவல்துறையினர் அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராஜு தலைமையில் பேச்சுவார்த்தை நடத்த அழைத்தனர்.
இதனையடுத்து வருவாய் கோட்டாட்சியரிடம் பேச்சுவார்த்தை நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
வண்டிப் பாதை எனும் பெயரில் இருந்த இடத்தை காவல்துறைக்கு எப்படி பெயர் மாற்றம் செய்யலாம்? இது வருவாய் துறை செய்த தவறு. தவறு செய்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களின் இடங்களுக்கு பாதை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராஜுலு இந்த இடம் காவல் துறையினருக்கு சொந்தமான இடம் என அரசு கோப்பு ஒன்றை எடுத்துக் காட்டியவுடன், கோபமடைந்த சண்முகம் இது யார் தந்த ஆவணம் ?என தனது கையிலிருந்த நிலத்தின் வரைபடத்தை எடுத்துக்காட்டி ஆவேசமாக பேசினார்.
இதனையடுத்து வாக்குவாதம் முற்றிய நிலையில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணாமல் இந்த இடத்தை விட்டு அகல மாட்டேன். (அ) தீர்வு காணும் நபரிடம் எங்களை அழைத்துச் செல்லுங்கள் என்று கோட்டாட்சியர் அலுவலக மேசை மீது தட்டிக் கூறி அலுவலகத்தில் அமர்ந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.