சிலிண்டர் தட்டுப்பாட்டால் தோசை, சப்பாத்தி, புரோட்டா விற்பனைக்கு இல்லை: அரியலூர் ஓட்டலில் வைக்கப்பட்ட அறிவிப்பு பலகை.
அமெரிக்கா-ஈரான் இடையே நடைபெற்று வரும் போர்ச்சசூழல் காரணமாக சிலிண்டர் மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதன் காரணமாக அரியலூர் மாவட்டத்திற்கு வணிக ரீதியான சிலிண்டர் சப்ளை நிறுத்தப்பட்டுள்ளதால், உணவகங்கள் மற்றும் பேக்கரிகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றன.
அரியலூர் மாவட்டத்திலுள்ள கேஸ் சிலிண்டர் நிறுவனங்களுக்கு திருச்சியில் இருந்து வணிக எரிவாயு சிலிண்டர் சப்ளை செய்யப்படுவது வழக்கம். கடந்த இரண்டு நாட்களாக அந்த சப்ளை நிறுத்தப்பட்டுள்ளதால், அரியலூர் மாவட்டம் முழுக்க வணிக சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் அரியலூரில் உள்ள தனியார் உணவகம் ஒன்றில் தோசை, பரோட்டா, சப்பாத்தி மற்றும் சைனீஸ் உணவுகளான நூடுல்ஸ், ப்ரைட் ரைஸ் உள்ளிட்ட உணவு வகைகள் தயாரிப்பது நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் கடை வாசலில் சப்பாத்தி, தோசை, பரோட்டா ஆகிய உணவுகள் இன்று இல்லை எனும் வாசகத்தையும் எழுதி பார்வைக்கு வைத்துள்ளனர்.
இது குறித்து தனியார் ஓட்டல் உரிமையாளர் மனோகர் கூறும் போது…
வணிக ரீதியான சிலிண்டர் சப்ளை இல்லாததால், கடந்த இரண்டு நாட்களாக கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறோம். தற்சமயம் இருக்கும் சிலிண்டர்களை வைத்து உணவு சமைக்க முயற்சித்து வருகிறோம். மேலும் உணவு தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களை வீட்டிற்கு அனுப்பவும் இயலாமல், அவர்களுக்கு தேவையான உணவுகளையே செய்யக்கூட முடியாத சூழல் தற்பொழுது ஏற்பட்டுள்ளது.
மத்திய-மாநில அரசுகள் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு, உரிய தீர்வை எடுக்கும் பட்சத்தில்தான் ஓட்டல் தொழிலை தொடர்ந்து நடத்த முடியும் என தெரிவித்தார்.

