Skip to content

அரியலூர்-முதியவரை தாக்கி நகைகளை பறித்த இளம்பெண் கைது..

அரியலூர் மாவட்டம்,தளவாய் அடுத்துள்ளது வங்காரம் கிராமம். இங்கு ஊருக்கு வெளியே காப்புகாடு உள்ளது. கடந்த அக்டோபர் 16-ஆம் தேதி முதியவர் ஒருவர் காப்புக் காட்டுக்கு வந்துள்ளார். அப்போது அங்கு வந்த இளம்பெண் ஒருவர், முதியவரிடம் ஆசை வார்த்தைகளைக் கூறி பேச்சுக் கொடுத்து மது அருந்த அழைத்துள்ளார்.

இளம்பெண்ணின் பேச்சில் மயங்கிய முதியவர், அவரை நம்பி காப்புக் காட்டுக்குள் சென்றுள்ளார். பின்னர் அந்த இளம்பெண் தனது அலைபேசியில், மற்றொரு ஆண் நண்பரை வருமாறு அழைத்திருக்கிறார். சிறிது நேரத்தில்

அங்கு வந்த தனது ஆண் நண்பருடன் சேர்ந்து அந்த முதியவரை கடுமையாக தாக்கிய இளம்பெண், அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலி மற்றும் மோதிரம் உள்ளிட்ட ஆறரை பவுன் நகையை பறித்துச் சென்று தலைமறைவாகி விட்டனர்.

அந்த இளம்பெண் குறித்து எந்த விவரமும் தெரியாத நிலையில் காப்புக்காட்டிலிருந்து வெளியே வந்த முதியவர், சாலையில் வந்தவர்களின் உதவியால் நடந்த சம்பவம் குறித்து தளவாய் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய காவல்துறையினர், அருகிலுள்ள சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள CCTV காட்சிகளை ஆய்வு செய்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஸ் பாலசுப்பிரமணியன், குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கண்டறிய தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.

இதனையடுத்து விசாரணையை தொடங்கிய காவல்துறையினர், முதியவரை தாக்கி நகையை பறித்துச் சென்றது அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அடுத்த சிலம்பூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவரின் மனைவி பாஞ்சாலை என்கிற கலையரசி(35) என்பதும், அவரது ஆண் நண்பராக வந்தது அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த மேலகுடியிருப்பை சேர்ந்த நவீன்குமார் (30) என்பதையும் கண்டுபிடித்தனர்.

பின்னர் பாஞ்சாலை என்கிற கலையரசி மற்றும் நவீன்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து முதியவரிடம் பறித்துச் சென்ற ஆறரை பவுன் நகையை மீட்டதுடன், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

முதியவர் ஒருவரை ஆசை வார்த்தை கூறி இளம் பெண் ஒருவர் அழைத்துச் சென்று தாக்கி நகைகளை பறித்து சென்றது தளவாய் சுற்றுவட்டார கிராம மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!