Skip to content

அட்சய திருதியை, நகைக்கடைகளில் வியாபாரம் அமோகம்

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில்  மூன்றாம் பிறையை  அட்சய திருதியை என்கிறோம். இந்த நாள்இந்தியாவில் இந்துக்கள் மற்றும் ஜைனர்களால்    செழிப்பின் அறிகுறியாகு கொண்டாடுகிறார்கள். நேபாளத்திலும் இதனை கொண்டாடுகிறார்கள்.

தமிழ்நாட்டில் அட்சய திருதியை தினத்தில் தங்கம்,  வெள்ளி போன்ற பொருட்கள் வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த பொருட்களை  அட்சய திருதியை நாளில் வாங்கினால் ஆண்டு முழுவதும் பொருள் சேரும் என்பது ஐதீகம்.

அரிசி வாங்குபவர்கள், வங்கிக் கணக்கில் பணம் வைப்பவர்கள், புதிய பொருட்கள் அல்லது பாத்திரங்கள் வாங்குபவர்கள் – கோயில்களுக்குச் செல்வது, ஏழை மக்களுக்கு உணவு அல்லது சிறப்பு சலுகைகளை தானம் செய்வது அல்லது ஏழைக் குழந்தைகளின் கல்விக் கட்டணத்திற்கு உதவுவது போன்ற அனைவருக்கும் இந்த நாள் புனிதமானது. இவை அனைத்தும் அட்சய திருதியைக்கு நல்ல அறிகுறிகளாகும்.

பரசுராமர் பிறந்த தினத்தை தான் அட்சய திருதியை நாளாக கொண்டாடுகிறார்கள் என்பாரும் உண்டு.

வழக்கத்தை விட அதிக  அளவில் புதுப்புது மாடல்களில் நகைகள்  அதிக அளவில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது.  மக்களும் எதிர்பார்த்தபடியே காலையிலேயே நகைக்கடைகளுக்கு வரத் தொடங்கினர். வெயில் சட்டெரித்தபோதிலும் நகை வாங்க மக்கள்  குடும்பம் குடும்பமாக வந்தனர்.

அட்சய திருதியை நாள் இந்த வருடம் புதன் கிழமையில் வந்திருப்பது கூடுதல் சிறப்பு. பொன் கிடைத்தாலும், புதன் கிடைக்காது என்பார்கள். இந்த வருடம் பொன்னும், புதனும் சேர்ந்து கிடைத்ததாக  தங்கம் வாங்கிய பெண்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

அட்சய திருதியை தினத்தை முன்னிட்டு, வாடிக்கையாளர்களைக் கவருவதற்காக நகைக் கடைகள் போட்டி போட்டுக் கொண்டு, சலுகைகளை அறிவித்துள்ளன. சில கடைகளில் பவுனுக்கு ரூ.1,000 வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல கடைகளில் தங்கம், வெள்ளி நகைகளுக்கு செய்கூலி, சேதாரத்தில் தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, எடை குறைவான நெக்லஸ், ஃபேன்சி வளையல், கம்மல், மோதிரம், டாலர் செயின் ஆகியவை புதிய ரகங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதேபோல, வைரம், பிளாட்டினம் நகைகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. அத்துடன் இன்று நகைகள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சில நகைக் கடைகளில் லட்சுமி குபேர பூஜை செய்து கொடுக்கப்பட்டது.

இது குறித்து பிரபல ஜோதிடர் ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

அட்சய திருதியை நாளில் தங்கம் தான் வாங்க வேண்டும் என்பது அல்ல. வசதியில்லாதவர்கள் அட்சய திருதியை நாளில் உப்பு வாங்கி வைப்பது சிறப்பு. உப்பு மட்டுமின்றி அரிசி, ஆடைகள் என தேவையான எந்த ஒரு பொருளை வாங்கினாலும் அது பலமடங்கு  பெருகும் என்பது ஐதீகம். எனவே வசதி இல்லாதவர்கள் உப்பு, மஞ்சள், நெல், அரிசி ஆகியவற்றை வாங்கி மகாலட்சுமி படத்திற்கு முன் வைத்து வழிபடலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

 

error: Content is protected !!