Skip to content

பீகாரில் துணை முதல்வர் கார் மீது தாக்குதல்

பீகாரில் இன்று முதல்கட்ட தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், துணை முதல்வர் விஜயகுமார் சின்ஹா மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். இந்த சம்பவம் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

லக்கிசராய் பகுதியின் கோரியாரி கிராமத்திற்குள் விஜயகுமாரின் கார் நுழைய முயன்றபோது, காரை சூழ்ந்துக்கொண்ட மர்ம நபர்கள் காலணியை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் விஜயகுமாருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத நிலையில், தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான வீடியோ பரவலாக ஷேராகி வருகிறது. விஜயகுமாரின் காரை ஒரு கும்பல் சூழ்ந்துகொண்டு, ஒழிக, ஒழிக என்று கோஷமிட்டபடி காலணிகளை வீசுவது பதிவாகியுள்ளது. சின்ஹா தனது வாகன அணிவகுப்பு மீது கற்களும் வீசப்பட்டதாகக் குற்றம் சாட்டினார். இதுகுறித்து அவர் கூறுகையில், “இவர்கள் அனைவரும் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் குண்டர்கள். கிராமத்திற்குள் நான் செல்ல விடாமல் தடுக்கிறார்கள். என் வாக்குச் சாவடி முகவரைத் திருப்பி அனுப்பிவிட்டனர். அவரை வாக்களிக்க விடவில்லை. இவர்களது அராஜகத்தைப் பாருங்கள். கோரியாரி கிராமத்தின் 404 மற்றும் 405 எண் வாக்குச் சாவடிகளில் அராஜகம் நடக்கிறது.

என்டிஏ கூட்டணி ஆட்சிக்கு வர இருப்பதால், இவர்களது வயிற்றில் புளியை கரைக்கிறது. இந்த குண்டர்கள் என்னை கிராமத்திற்குள் அனுமதிக்கவில்லை. நான் நிச்சயம் வெற்றி பெறுவேன்” என்று கூறியிருக்கிறார்.

error: Content is protected !!