ஏஐ ஆதிக்கம் பெருகிய பிறகு இமேஜ்கள், வீடியோக்கள் டிரெண்டிங் ஆகி வருகின்றன. அந்த வகையில், “கூகுளின் ஜெமினியின் ‘நேனோ பனானா ஏஐ’ புகைப்படங்கள் தற்போது இணையத்தைக் கலக்கி வருகின்றன. அதிலும் ‘சாரி ட்ரெண்ட்’ எனும் பெண்கள் சேலை அணிந்திருக்கும் புகைப்படங்கள், 3டி புகைப்படங்கள், ரெட்ரோ ஸ்டைல் என ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் புகைப்படங்களை உருவாக்குவதில் இளைஞர்கள் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக பெண்கள் பலரும் தங்கள் புகைப்படங்களை பதிவேற்றம் செய்து, ‘சேலை கட்டியிருப்பது போல’ மாற்றி தங்கள் சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுகின்றனர்.வெள்ளை நிற மற்றும் கருப்பு நிற புடவை, அனிமேஷன் கேரக்டர்கள், ரெட்ரோ ஸ்டைல் உள்ளிட்டவை தற்போது இணையத்தை கலக்கி வருகின்றன. பொழுதுபோக்காக பலரும் இதைச் செய்து சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
ஆனால் இது ஒரு பக்கம் பொழுதுபோக்காக இருந்தாலும் மறுபக்கம் இந்த புகைப்படங்கள் தவறாக பயன்படுத்தக் கூடும் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக பஞ்சாப் காவல்துறை விடுத்த எச்சரிக்கையில், கூகுள் ஜெமினி பெயரில் வைரலாகும் நேனோ பனானா ஏஐ சேலை டிரெண்ட் தொடர்பாக தனிப்பட்ட தகவல்கள், புகைப்படங்களை போலி இணையதளங்கள் அல்லது ஆப்களில் பதிவேற்றம் செய்ய வேண்டாம் எனவும் இந்த புகைப்படங்கள் தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது. அது மட்டும் இன்றி ஒரே கிளிக்கில் உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணம் சைபர் திருட்டு கும்பல்களின் கைக்கு போகலாம். உங்கள் தகவல், உங்கள் பொறுப்பு” என்று தெரிவித்துள்ளது.