சென்னையை சேர்ந்த 38 வயதான ஆட்டோ டிரைவர் தனது மனைவியுடன் வசித்து வந்தார். இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். கடந்த 2.10.2024 அன்று தாயார் வீட்டு வேலைக்கு சென்று விட்ட நிலையில், சிறுமிகள் இருவரும் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது தந்தையான ஆட்டோ டிரைவர், ஒரு மகளை கடைக்கு அனுப்பி வைத்து விட்டு 14 வயதுடைய இன்னொரு மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். பின்னர், இதுகுறித்து வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டி உள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் நீலாங்கரை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை ‘போக்சோ’ சிறப்பு கோர்ட்டில் நீதிபதி பத்மா முன்னிலையில் நடந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, ஆட்டோ டிரைவருக்கு சாகும் வரை சிறையில் இருக்கும் வகையில் ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு இழப்பீடாக ரூ.10 லட்சமும், சிறுமியின் தாயார், சகோதரிக்கு தலா ரூ.3 லட்சமும் வழங்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார்.

