தமிழ் சினிமாவின் மிக மூத்த மற்றும் புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் புரோடக்சன்ஸின் தூணாக விளங்கிய ஏ.வி.எம். சரவணன் இன்று (டிசம்பர் 4, 2025) வயது மூப்பு காரணமாக தனது 86 வயதில் காலமானார். நேற்று தனது பிறந்தநாளைக் கொண்டாடிய நிலையில், இன்று காலை அவர் உயிரிழந்த செய்தி திரையுலகம் முழுவதிலும் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஏ.வி.மெய்யப்ப செட்டியார் 1945 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஏவிஎம் நிறுவனம், கோலிவுட்டில் இன்றும் மதிக்கப்படும் தலையாய நிறுவனங்களில் ஒன்றாகும். எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் காலம் முதல் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், விஜய், அஜித், சூர்யா எனப் பல தலைமுறை முன்னணி நடிகர்களுக்கு வெற்றிக் காவியங்களைத் தந்த பெருமை இந்த நிறுவனத்திற்கே உண்டு. ஒருமுறையாவது ஏ.வி.எம் நிறுவனத்தின் பேனரில் நடித்துவிட வேண்டும் என்பது பல நடிகர்களின் உச்சபட்ச கனவாக இருந்துள்ளது.
நிறுவனத்தின் ஸ்தாபகர் ஏ.வி. மெய்யப்ப செட்டியாரின் மறைவுக்குப் பிறகு, அவரது மகன் சரவணன் நிறுவனத்தின் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். ஏ.வி.எம் நிறுவனத்தின் பாரம்பரியம் மற்றும் வெற்றிப் பாதையில் எந்தவொரு தொய்வும் வந்துவிடக்கூடாது என்பதில் அவர் மிகுந்த முனைப்புடன் செயல்பட்டார். இவரது தலைமையின் கீழ் ஏ.வி.எம் நிறுவனம் தொடர்ந்து ஏராளமான வெற்றிப் படங்களைக் கொடுத்து, பெரும் லாபத்தைக் கண்டதுடன், பல ஊழியர்களின் வாழ்வாதாரமாகவும் விளங்கியது.
பெரும் சாம்ராஜ்யத்தை நிர்வகித்தபோதும், ஏ.வி.எம். சரவணன் அனைவரிடமும் எளிமையாகவும், பணிவுடனும் பழகக்கூடியவர். எந்தவித ஆடம்பரமும் இன்றி திரைத்துறை விழாக்களில் அவர் கலந்துகொள்வது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. ரஜினிகாந்த் உள்ளிட்ட அனைத்து நட்சத்திரங்களும், ஏ.வி. மெய்யப்ப செட்டியார் மீது வைத்திருந்த அதே அளவு மரியாதையையும், அன்பையும் சரவணன் மீதும் வைத்திருந்தனர்.
கடந்த சில நாட்களாக வயது மூப்பின் காரணமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சரவணன், இன்று காலை காலமானார். இவர் திரைப்பட தயாரிப்பு மட்டுமின்றி, ஏ.வி.எம் ஸ்டுடியோவின் கதை இலாகாவிலும் முக்கியப் பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், 1986 ஆம் ஆண்டு சென்னை மாநகரின் ஷெரீப் பதவியையும் வகித்துள்ளார். உடல்நலக்குறைவால் காலமான அவரது உடல், அஞ்சலிக்காக ஏ.வி.எம் ஸ்டுடியோவின் மூன்றாவது தளத்தில் வைக்கப்பட்டுள்ளது. திரைத்துறை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது மறைவு தமிழ் சினிமாவுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.

