சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 10ம் மாதம் 27ம் தேதி நடைபெற்ற மாமன்னர் மருது பாண்டியர் நினைவு தினத்தையும், 30/10/25 அன்று நடைபெற்ற தேவர் குரு பூஜையையும் முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்தில் காளையார்கோவில், சிவகங்கை நகர் & தாலுகா, மானாமதுரை, திருப்புவனம், திருப்பத்தூர் நகர், கீழச்சீவல்பட்டி, திருக்கோஸ்டியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சாலையில் ஸ்டண்ட் செய்த வாகனங்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மீது, பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படுத்தியதாக மொத்தம் 68 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதுடன், இதில் 96 பேரை காவல்துறை கைது செய்து பின்னர் பிணையில் விடுவித்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களின் காவல்துறையினர் இதுவரை 46 வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பின்னர் நீதிமன்றத்தின் வழியாக உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுச் சாலைகளில் ஆபத்தான வகையில் வாகனம் ஓட்டியவர்களின் ஒட்டுநர் உரிமத்தை ரத்து / இடைநிறுத்தம் செய்ய மேல்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், பாதுகாப்பான முறையில் வாகனம் ஓட்டுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் பொருட்டு, பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் இன்று சிவகங்கை ஆயுதப்படை மைதானத்தில் “DRIVE SAFE” எனும் வடிவத்தில் அடுக்கி வைக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

