Skip to content

அயோத்தி மாநகராட்சி அதிரடி: 15 கி.மீ. தூரத்திற்கு இறைச்சி மற்றும் மதுபானம் தடை

அயோத்தி மாநகராட்சி நிர்வாகம், ராமர் கோவில் அமைந்துள்ள பகுதியைச் சுற்றி 15 கிலோமீட்டர் சுற்றளவிற்குள் அசைவ உணவு விற்பனை மற்றும் விநியோகத்திற்கு அதிரடியாகத் தடை விதித்துள்ளது.

கடந்த மே 2025-ல், 14 கி.மீ. ராமர் பாதையில் இறைச்சி மற்றும் மதுபான விற்பனைக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், சில பகுதிகளில் விதிகள் மீறப்படுவதாகப் புகார்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து, தற்போது தடையின் வரம்பை 15 கிலோமீட்டராக உயர்த்தி மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

முக்கியமாக, ஸ்விக்கி (Swiggy) மற்றும் ஜொமேட்டோ (Zomato) போன்ற ஆன்லைன் உணவு விநியோகத் தளங்கள் மூலம் ‘பஞ்சகோஷி பரிக்ரமா’ எனப்படும் புனித யாத்திரை பாதையில் அசைவ உணவுகள் விநியோகிக்கப்படுவதாகப் புகார்கள் வந்தன. இதனைத் தடுக்கும் பொருட்டு, தற்போது ஆன்லைன் விநியோகத்திற்கும் முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.

புனித நகரத்தின் புனிதம் மற்றும் பக்தர்களின் மத உணர்வுகளைப் பாதுகாப்பதே இந்தத் தடையின் நோக்கம் என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இப்பகுதியில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் அசைவ உணவு அல்லது மதுபானம் பரிமாறக் கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது தொடர்ந்து கண்காணிப்பு நடத்தப்படும் என்றும், விதிகளை மீறுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அயோத்தி மாநகராட்சி நிர்வாகம் உறுதிபடத் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!