வங்கதேசத் தலைநகர் டாக்காவில் இன்று அதிகாலை முதல் வெடித்துள்ள பயங்கர வன்முறையில், அந்நாட்டின் முன்னணி செய்தித்தாள் நிறுவனங்களான ‘புரோதோம் அலோ’ மற்றும் ‘தி டெய்லி ஸ்டார்’ ஆகியவற்றின் அலுவலகங்கள் போராட்டக்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்டன.
கடந்த ஆண்டு வங்கதேசத்தில் நடந்த ஜனநாயகப் போராட்டத்தின் முக்கியத் தலைவராகவும், ‘இன்குலாப் மஞ்ச்’ அமைப்பின் செய்தித் தொடர்பாளராகவும் இருந்த ஷெரீப் ஒஸ்மான் ஹாடி என்பவர், கடந்த டிசம்பர் 12-ல் நடந்த துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்தார்.
சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் செய்தி வங்கதேசம் முழுவதும் பரவியதைத் தொடர்ந்து, அவரது ஆதரவாளர்கள் வீதியில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டக்காரர்களில் ஒரு பிரிவினர், குறிப்பிட்ட சில செய்தித்தாள் நிறுவனங்கள் பக்கச்சார்பாகச் செயல்படுவதாகவும், இந்தியாவின் ஆதரவாளர்களாக இருப்பதாகவும் கூறி, டாக்காவின் கார்வான் பஜார் பகுதியில் உள்ள அவர்களது அலுவலகங்களை முற்றுகையிட்டனர்.
வியாழக்கிழமை நள்ளிரவு சுமார் 12 மணி அளவில் தொடங்கிய தாக்குதலில், போராட்டக்காரர்கள் முதலில் புரோதோம் அலோ அலுவலகத்தை அடித்து நொறுக்கித் தீ வைத்தனர்.
அடுத்த சில நிமிடங்களில் அருகில் உள்ள தி டெய்லி ஸ்டார் அலுவலகமும் தீக்கிரையாக்கப்பட்டது. கட்டிடத்தின் கீழ் தளங்களில் தீ மளமளவெனப் பரவியதால், உள்ளே பணியாற்றிக் கொண்டிருந்த

பத்திரிகையாளர்கள் மற்றும் ஊழியர்கள் வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டனர்.
“என்னால் சுவாசிக்க முடியவில்லை, அதிகப் புகை சூழ்ந்துள்ளது, என்னைக் காப்பாற்றுங்கள்” என்று டெய்லி ஸ்டார் நிருபர் ஸைமா இஸ்லாம் சமூக வலைதளங்களில் பதிவிட்டது உலகையே அதிர வைத்தது.
தீயணைப்புத் துறையினர் தீயைக் கட்டுப்படுத்த முயன்றபோது போராட்டக்காரர்கள் தடுத்தனர். இறுதியாக வங்கதேச ராணுவம் வரவழைக்கப்பட்டு, சுமார் 4 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு கட்டிடத்தின் மொட்டை மாடியில் தஞ்சம் புகுந்திருந்த 25-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
நிலைமை மோசமடைந்து வருவதைத் தொடர்ந்து, வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில்:
ஷெரீப் ஒஸ்மான் ஹாடி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, நாளை (டிசம்பர் 20, சனிக்கிழமை) ஒரு நாள் தேசிய துக்க தினமாக அறிவித்துள்ளார்.
“அனைத்து குடிமக்களும் பொறுமை காக்க வேண்டும். வன்முறையைத் தவிர்த்து, சட்டம் தனது கடமையைச் செய்ய ஒத்துழைக்க வேண்டும்” என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இருப்பினும், டாக்காவின் பல பகுதிகளில் இன்னும் பதற்றம் குறையவில்லை. ராணுவமும், எல்லைப் பாதுகாப்புப் படையினரும் (BGB) முக்கிய இடங்களைக் கண்காணித்து வருகின்றனர். இந்தத் தாக்குதல் காரணமாகப் பல முன்னணி இதழ்கள் இன்று அச்சேறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

