இந்தியன் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு நேற்று அனுப்பிய குறுஞ்செய்தியில், ஏ.டி.எம். பரிவர்த்தனைகளுக்கான புதிய கட்டண விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, வாடிக்கையாளர்கள் இனி மாதம் 5 முறை மட்டுமே ஏ.டி.எம். இயந்திரங்கள் மூலம் எவ்விதக் கட்டணமும் இன்றி பணப் பரிவர்த்தனை செய்ய முடியும். இந்த இலவச வரம்பைத் தாண்டி மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு கூடுதல் பரிவர்த்தனைக்கும் தலா ரூ. 17 மற்றும் அதற்கான ஜி.எஸ்.டி (GST) வரி வசூலிக்கப்படும் என்று வங்கி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
இந்த புதிய நடைமுறையானது வரும் ஏப்ரல் மாதம் 20-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வரவுள்ளது. சாதாரண மற்றும் நடுத்தர வர்க்க வாடிக்கையாளர்களைப் பாதிக்கும் வகையில் அமைந்துள்ள இந்த அறிவிப்பு, இந்தியன் வங்கி வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பல்வேறு சேவைக் கட்டணங்கள் உயர்ந்து வரும் நிலையில், ஏ.டி.எம். கட்டண உயர்வு கூடுதல் சுமையாக இருக்கும் எனப் பொதுமக்கள் கருதுகின்றனர்.

