Skip to content

வங்கி ஊழியர் மாயம்- கார் மோதி வாலிபர் பலி-திருச்சி க்ரைம்

பணிக்குச் சென்ற வங்கி ஊழியர் திடீர் மாயம்

திருச்சி பாலக்கரை செங்குளம் காலனி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (56)
பொன்மலை பட்டியில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 27ம் தேதி காலையில் வேலைக்கு சென்றார்.
பின்னர் பணி இடத்திலிருந்து மாலையில் திரும்பினார் ஆனால் வீட்டுக்கு செல்லவில்லை. உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர் .ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை. அதைத் தொடர்ந்து அவரது மனைவி பூங்கொடி பொன்மலை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்கு பதிவு செய்து மாயமான ஆறுமுகத்தை தேடி வருகின்றனர்.

பால்பண்ணை பாலம் அருகே கார் மோதி வாலிபர் பலி

திருச்சி சுப்பிரமணியபுரம் காந்தி தெரு நல்லையன் தெரு பகுதியை சேர்ந்தவர் ரிச்சர்ட் (வயது 45) .
இவர் திருச்சி- சென்னை பைபாஸ் சாலையில் பால் பண்ணை மேம்பால நுழைவு பகுதியில்
சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக சென்ற கார் அவர் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த ரிச்சர்ட் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது. காரை ஓட்டி வந்த கே.கே.நகர் ஓலையூர் திருமலை சமுத்திரம் பகுதியைச் சேர்ந்த விக்னேஸ்வர பாண்டியன் ( 29 ) என்பவருக்கும் காயம் ஏற்பட்டது அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து திருச்சி வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் சிவராமன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

பிரபல ஓட்டலில் தங்கி இருந்த பெண்ணிடம் நகைகள் திருட்டு

மதுரை வாடிப்பட்டி மண்ணடி மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் காளிமுத்து. இவரது மனைவி அழகுமணி (35). இவருக்கு திருப்பூர் பொள்ளி காளிபாளையம் அஞ்சல் நகர் பகுதியைச் சேர்ந்த நேவி (34 )என்பவர் அறிமுகமானார். பின்னர் திருச்சி சத்திரம் பகுதியில் இலவச லேப்டாப் கொடுப்பதாகவும் ,அதனை தான் வாங்கித் தருவதாகவும் கூறியுள்ளார். இதனை நம்பிய அழகுமணி தனது மகனையும் அழைத்துக் கொண்டு நேவியுடன் திருச்சி வந்தார். பின்னர் திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகாமையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் அறையில் எடுத்து தங்கினர்.
பின்னர் அந்த நபர் அழகுமணியிடம், தங்க நகைகள் அணிந்தால் மடிக்கணினி தரமாட்டார்கள் என்று கூறினார்.

அதைத்தொடர்ந்து அழகு மணி தான் அணிந்திருந்த மூன்று பவுன் தாலிச் செயின்,
அரைப்பவன் தோடு கால் பவுன் மெட்டி ஆகியவற்றை கழற்றி தான் தங்கி இருந்த அறையில் வைத்தார். பின்னர் நேவி அழகு மணியை அழைத்துக்கொண்டு சத்திரம் பஸ் நிலையம் சென்றார்.
பின்னர். அவரை அங்கு சற்று நேரம் காத்திருக்குமாறு கூறிவிட்டு மாயமானார். பின்னர் சில மணி நேரம் கழித்து அழகு மணி தான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு சென்று பார்த்தபோது அருகில் வைத்திருந்த நான்கு பவுன் நகைகளை காணாமல் திடுக்கிட்டார். சத்திரம் பஸ் நிலையத்தில் அவரை திட்டமிட்டு காத்திருக்க வைத்துவிட்டு அந்த நேரத்தில் ஹோட்டலுக்கு சென்று நகையை திருடி கொண்டு நேவி தப்பி ஓடியது தெரியவந்தது. இது பற்றி அழகு மணி கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் கிரேசி தமிழ்ச்செல்வி
வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இலவச லேப்டாப் வாங்கித் தருவதாக அழைத்து, இளம் பெண்ணின் நான்கு பவுன் நகையை நூதன முறையில் பறித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குட்கா ,புகையிலை விற்ற வியாபாரி உள்பட 2 பேர் அதிரடி கைது

திருச்சி கிராப்பட்டி பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனை நடப்பதாக மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அவர் அங்கு விரைந்து சென்று பெட்டிக்கடையில் சோதனை நடத்திய போது தடை செய்யப்பட்ட 5.394 கிலோகிராம் எடை கொண்ட ஹான்ஸ், கூலிப் இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர் புகையிலைப் பொருட்களை கைப்பற்றிய அதிகாரிகள் இது தொடர்பாக எடமலைப்பட்டி புதூர் போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பெட்டிக்கடை உரிமையாளர் கிராப்பட்டி மதுரை மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த முனுசாமி ( 59 ) என்பவரை கைது செய்தனர். இதே போன்று பாலக்கரை துரைசாமிபுரத்தில் ஹான்ஸ் புகையிலை பதுக்கி வைத்திருந்த துரைசாமிபுரம் தனமணி காலனி பகுதியைச் சேர்ந்த கரீம் (19 ) என்ற வாலிபரை பாலக்கரை போலீஸ் எஸ்ஐ குமார் கைது செய்தார்.

error: Content is protected !!