நீலகிரி மாவட்டம், மஞ்சூர் பஜாரில் காருக்கு முன்னால் கரடி டிரைவரை தாக்குவது போல் ஆக்ரோஷமாக நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றபுற பகுதிகளில் சமீபகாலமாக கரடிகளின் நடமாட்டம் அதிகளவு உள்ளது. பெரும்பாலும் இரவு நேரங்களில் நடமாடும் கரடிகள் கடைகள், பூட்டி கிடக்கும் வீடுகளின் கதவு மற்றும் ஜன்னல்களை உடைப்பதும், பொருட்களை நாசம் செய்வதும் வாடிக்கையாக உள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மஞ்சூர் பஜார் பகுதியில் உலா வந்த இரண்டு கரடிகள் சாலையோரம் இருந்த குப்பை தொட்டியில் உணவு தேடி புகுந்தது. அப்போது, அவ்வழியாக காரில் சென்றவர்கள் குப்பை தொட்டிகுள் உருவங்கள் அசைவதை கண்டு காரை நிறுத்தினர். காரின் விளக்கு வெளிச்சத்தை கண்ட கரடிகள் குப்பை தொட்டியில் இருந்து வெளியேறியது.
அதில், கரடி ஒன்று ஆக்ரோஷத்துடன் காரை நோக்கி சென்று முன் கால்கள் இரண்டையும் தூக்கியபடி மிரட்டும் தொனியில் எழுந்து நின்து.
இதை கண்டவுடன் பீதி அடைந்த கார் ஓட்டுனர் வேகமாக காரை பின்னால் எடுத்து அங்கிருந்து அகன்று சென்றனர். இதை தொடர்ந்து கரடிகள் மீண்டும் உணவுக்காக குப்பை தொட்டிக்குள் தஞ்சம் அடைந்தது. மஞ்சூர் பகுதியில் சமீபகாலமாக கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து கரடிகளின் நடமாட்டத்தை அடியோடு கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

