வருமான வரி சோதனைக்குப் பிறகு, முன்னணி மாட்டிறைச்சி ஏற்றுமதி நிறுவனம் பாஜகவுக்கு ரூ.30 கோடி நன்கொடை வழங்கியது அம்பலமாகியுள்ளது. 2024-25ம் ஆண்டில் அல்லானா குழுமம் அதிக அளவில் நன்கொடை வழங்கியதாக Scroll.in இணையதளம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மாட்டிறைச்சி ஏற்றுமதி 4 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் தாண்டியுள்ளது. இது 2018-ம் ஆண்டிற்குப் பிறகு எட்டப்பட்ட மிகப்பெரிய சாதனை அளவாகும். 2014-ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பாக, அப்போதைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) அரசு “இளஞ்சிவப்பு புரட்சியை” (இறைச்சி ஏற்றுமதி) ஊக்குவிப்பதாக பிரதமர் மோடி கடுமையாகச் சாடியிருந்தார். அதே நேரம், மோடி பிரதமராகுவதற்கு முன்பே அல்லானா குழுமம் பா.ஜ.க-வுக்கு நிதியளித்து வந்திருக்கிறது. 2013-14-ம் ஆண்டில் ரூ.2 கோடியை வழங்கியது.
2019-ம் ஆண்டில் அல்லானா குழுமம் ரூ.2,000 கோடி வரி ஏய்ப்பு செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. மேலும், அந்தக் குழுமத்துடன் தொடர்புடைய 100-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இந்த இக்கட்டான சூழலில் அல்லானா குழுமம் தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கத் தொடங்கியது. அதன் அடிப்படையில், 2019-ம் ஆண்டு தேர்தல் பத்திரங்கள் மூலம் பா.ஜ.க-வுக்கு ரூ.2 கோடியையும், சிவசேனாவுக்கு ரூ.5 கோடியையும் வழங்கியுள்ளது. அதன் உச்சமாக 2024-25 நிதி ஆண்டில் நன்கொடைத் தொகை 15 மடங்கு அதிகரித்து ரூ.30 கோடியை வழங்கியிருக்கிறது.

