கர்நாடக மாநிலம் மூடிகெரே சட்டமன்றத் தொகுதியின் எம்எல்ஏவாக இருப்பவர் நயனா மோட்டம்மா. இவரது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில், மர்ம நபர் ஒருவர் தொடர்ந்து எம்எல்ஏவின் ஆடை குறித்தும், அவரது தனிப்பட்ட தோற்றம் குறித்தும் மிகவும் இழிவாகவும், ஆபாசமாகவும் கருத்துக்களைப் பதிவிட்டு வந்துள்ளார். இது குறித்து எம்எல்ஏவின் உதவியாளர் சம்சுதீன், கடந்த 2025-ஆம் ஆண்டு இறுதியில் மூடிகெரே காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இப்புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அந்த நபரின் ஐபி (IP address) முகவரி மற்றும் சமூக வலைதளக் கணக்கை ஆய்வு செய்ததில், ராமநகரைச் சேர்ந்த யக்ஷித் ராஜ் என்பவர் இந்தச் செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. பெங்களூருவில் வேலை செய்து வந்த அவரை போலீசார் அதிரடியாகச் சுற்றி வளைத்துக் கைது செய்தனர். விசாரணையில், அவர் திட்டமிட்டே அவதூறு பரப்பியது உறுதி செய்யப்பட்டது.
இந்தச் சம்பவம் குறித்து எம்எல்ஏ நயனா மோட்டம்மா கூறுகையில், “பெண்களின் ஆடையை வைத்து அவர்கள் திறமையற்றவர்கள் என முத்திரை குத்தும் பிற்போக்குத்தனமான மனநிலை மாற வேண்டும்,” என்று வேதனையுடன் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட யக்ஷித் ராஜ் கடந்த 12-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

