அரியலூர் மாவட்டம் திருமானூரை சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் மகன் அபிஷேக் (19), திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் B.A. வரலாறு இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். அவர் அந்தக் கல்லூரியின் மாணவர் விடுதியில் தங்கியிருந்து பயின்று வந்தார்.
கடந்த 7ம் தேதி இரவு, அபிஷேக்வின் கைபேசியில் இருந்து அவரது தந்தை வெங்கடேசனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில், “உங்கள் பையன் தவறு செய்துள்ளார், உடனடியாக கல்லூரிக்கு வாருங்கள்” என விடுதி காப்பாளர் கூறியதாக தெரிகிறது.
அதன்படி, மறுநாள் காலை 10.30 மணியளவில் கல்லூரிக்கு சென்ற வெங்கடேசன், விடுதி காப்பாளரை சந்தித்து மகனை அழைத்து வருமாறு கேட்டுள்ளார். ஆனால், விடுதி காப்பாளர் “உங்கள் மகன் வெளியே சென்றிருப்பார், காத்திருங்கள்” என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
மாலை 4.30 மணி அளவுக்கு மகன் வராததை சந்தேகத்துடன் உணர்ந்த வெங்கடேசன், சிசிடிவி காட்சிகளை காணுமாறு வலியுறுத்தினார். சிசிடிவி பதிவுகளை சோதித்ததில், அபிஷேக் அறையை விட்டு வெளியே செல்லவோ, உள்ளே வரவோ இல்லை என்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து மற்ற மாணவர்களிடம் விசாரித்தபோது, ஒருவர் குளியலறையில் “ஒரு கால் தொங்குகிறதுபோல் தெரிகிறது” என கூறியுள்ளார். உடனடியாக விடுதி நிர்வாகமும், அபிஷேக்கின் தந்தையும் உள்ளே சென்று பார்த்தபோது, அவர் தூக்கில் தொங்கிய படி தற்கொலை செய்திருந்தது தெரியவந்தது.
உடல், உறையூர் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டு, உடல் கூறு ஆய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அபிஷேக்கின் தந்தை வெங்கடேசன், “என் மகன் இறப்பில் மர்மம் உள்ளது. விடுதி காப்பாளர் சித்திரவதை செய்திருக்கலாம். கடந்த வாரம் மட்டும் கல்லூரி கட்டணம் கட்ட வேண்டும் என கடுமையாக கூறியதாக மகன் தெரிவித்தான். பயத்தில் அந்தச் செயலுக்கு உட்பட்டிருக்கலாம்” எனக் கூறி,மாணவன் இறப்பு தொடர்பாக உறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் போலீசார் முறையான விசாரணை நடத்தி நியாயம் வழங்க வேண்டும் என கூறினார்.