Skip to content

மாநிலத்தின் உரிமைக்கான நிதியை தராமல் மிரட்டி பார்க்கும் பாஜக கூட்டம்… அமைச்சர் சிவசங்கர் பேச்சு

அரியலூரில் மாவட்ட திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு எனும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய போக்குவரத்து துறை அமைச்சரும் திமுக மாவட்ட செயலாளருமான எஸ்.எஸ்.சிவசங்கர், தமிழ்நாட்டை 3 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் படுபாதக செயலுக்கு அஞ்சாத கூட்டமாக பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் உள்ளது என்றார்.

மேலும், புதிய கல்விக் கொள்கை நம் மீது திணிக்கப்படுகிறது. கல்விக்கு தரக்கூடிய பணத்தை தராமல் நிறுத்தி வைத்துள்ளனர். தமிழகம் தேசிய கல்விக் கொள்கையை ஏற்காததால் பணத்தை தர முடியாது என ஒன்றிய அமைச்சர் சொல்கிறார். இதுவரை இந்தியாவை எத்தனையோ கட்சிகள் ஆண்டுள்ளது. குறிப்பாக ஜனதா கட்சி, காங்கிரஸ் வாஜ்பாய் தலைமையிலான பாஜக உள்ளிட்ட பல அரசுகள் ஆண்டிருந்திருந்தாலும் அவர்கள் யாரும் பேசத் துணியாததை, மாநிலத்தின் உரிமைக்கான நிதியை தர முடியாது என மிரட்டிப் பார்க்கும் கூட்டமாக பாஜக கூட்டம் உள்ளது

பாஜக பலவிதத்தில் துடிக்கிறது. பல்வேறு மாநிலங்களில் அவர்கள் ஆட்சிக்கு வந்துள்ளனர். பல மாநிலங்களில் ஆட்சி செய்பவர்களின் போர்வையில், அவர்கள் ஆட்சி செய்து கொண்டுள்ளனர். அவர்களால் நுழைய முடியாத மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கூட கேரளாவில் ஒரு எம்.பியை பெற்றுள்ளனர். ஆனால் தமிழ்நாட்டில் அவர்கள் தலைகீழாக நின்றால் கூட ஒரே ஒரு எம்பியை கூட அவர்களால் பெற முடியவில்லை.

தென் மாநிலங்கள் வரை அவர்களது கரம் நீண்டு விட்டது. ஆனால் தமிழகத்தில் அவர்கள் நினைத்தது நடக்கவில்லை என்றால் அதற்கு காரணம், தமிழகத்தின் அரணாக இரும்பு கரமாக இருந்து காப்பாற்றுபவர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

தமிழகத்தில் நமக்கு எதிரி பாஜக அல்ல. அவர்கள் 2-ம் இடத்தில் உள்ளனர். அதுவும் நோட்டாவுக்கும் கீழாக உள்ளனர். வெறும் 3 சதவீத வாக்குகள் மட்டுமே வாங்குகின்றனர். ஆனால், ஏன் பாஜகவை நான் எதிர்க்கிறோம் என்றால் 2-ம் இடத்தில் உள்ள அதிமுகவை கபளிகரம் செய்து அவர்களது தோளில் ஏறி அமர்ந்து உள்ளே நுழைய துடிக்கின்றனர். அவர்கள் உள்ளே நுழைந்து விட்டால் அதிமுகவை கபளிகரம் செய்து அதிமுக என்ற கட்சியே இல்லாமல் 2-ம் இடத்தில் வந்து விட பாஜக துடிக்கிறது. எனவேதான் அவர்கள் உள்ளே வருவதை தடுக்க வேண்டியது நம்முடைய கடமையாக உள்ளது என பேசினார்.

error: Content is protected !!