மத்திய அரசின் 2026–27-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஜனவரி 28-ம் தேதி தொடங்க உள்ளது. பிப்ரவரி 1-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்ற போதிலும், அன்றைய தினமே பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 28-ம் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் உரையுடன் தொடங்குகிறது. அன்று நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் அவர் உரையாற்றுவார். ஜனவரி 29-ம் தேதி ‘பீட்டிங் ரீட்ரீட்’ (Beating Retreat) விழா நடைபெறுவதால் அன்று நாடாளுமன்றம் கூடாது.
ஜனவரி 30-ம் தேதி நாடாளுமன்றம் மீண்டும் கூடும் போது, நாட்டின் பொருளாதார நிலை குறித்த ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளது. ஜனவரி 31-ம் தேதி நாடாளுமன்றத்திற்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.
கடந்த 2017-ம் ஆண்டு முதல் பிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வரும் நடைமுறை இப்போதும் பின்பற்றப்படுகிறது. இந்த ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுமா என்ற சந்தேகம் நிலவியது. ஆனால், விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமையிலும் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையை ஆற்றுவார்.
முதற்கட்டமாக பிப்ரவரி 13-ம் தேதி வரை பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெறும். அதனைத் தொடர்ந்து நாடாளுமன்றம் ஒரு மாத காலத்திற்கு ஒத்திவைக்கப்படும். மீண்டும் இரண்டாவது கட்டமாக மார்ச் 9-ம் தேதி கூடும் நாடாளுமன்றக் கூட்டத்தொடர், ஏப்ரல் 2-ம் தேதி வரை நடைபெற்று நிறைவடையும்.

