சத்திரம் பஸ் ஸ்டாண்டில் டூவீலர் திருடிய 2 பேர் கைது..
திருச்சி சர்க்கார் பாளையம் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் முடியப்பன். இவரது மகன் வில்லியம் அலெக்ஸாண்டர் (வயது 29). இவர் தனது இருசக்கர வாகனத்தை சத்திரம் பஸ் நிலையம் பொதுக்கழிப்பிடம் அருகில் நிறுத்திவிட்டு சென்றார். பின்னர் வந்து பார்த்தபோது தனது இருசக்கர வாகனத்தை காணவில்லை. உடனே இது குறித்து வில்லியம் அலெக்சாண்டர் கோட்டை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பெயரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வாசு வழக்கு பதிந்து, இது தொடர்பாக எட்வர்டு ஆனந்த் மற்றும் 16 வயது சிறுவர் ஆகிய இருவரை கைது செய்தார். அவர்களிடமிருந்து இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
போதை மாத்திரைகள் விற்ற 2 வாலிபர்கள் கைது
திருச்சி கே.கே.நகர் போலீசரகம் ஈ.வி.ஆர்.ரோடு அரிசி குடோன் அருகில் அம்மன் நகர் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, இளைஞர்களுக்கு கேடு விளைவிக்கும் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து கே.கே.நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்று தீவிரமாக கண்காணித்தனர். அப்போது சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் போதை மாத்திரை சப்ளை, விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் யபிஸ் ராஜா, மணிகண்டன் ஆகிய இருவர் என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி பஞ்சப்பூர் புதிய பஸ் ஸ்டாண்டில் கண்டக்டரிடம் பணப்பை அபேஸ்
புதுக்கோட்டை மாவட்டம் அண்டக்குளம் கலிங்கராயன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் சந்தனகுமார் ( 22). திருச்சி – புதுக்கோட்டை அரசு பஸ் கண்டக்டர். இவர் பஸ்ஸில் பணியின் போது தனது கைப்பையை வைத்திருந்தார். பஞ்சப்பூர் பஸ் நிலையத்திற்கு பஸ் வந்ததும் கைப்பையை பஸ்ஸில் சைடு கண்ணாடி அருகில் வைத்து விட்டு அலுவலகத்திற்கு கையெழுத்து போடச் சென்றார். பின்னர் வந்து பார்த்தபோது கைப்பையை காணவில்லை. உடனே இது குறித்து எடமலைப்பட்டிபுதூர் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். கைப்பையில் 43,875 ரூபாய் மதிப்புள்ள பஸ் டிக்கெட்டுகள், டி.சி, மார்க் சீட், ஏ.டிஎ.ம் கார்டு ஆகியவை இருந்தது. இது குறித்து எடமலைப்பட்டிபுதூர் குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்புச்செல்வி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.