பேருந்து கட்டண உயர்வு குறித்த எந்த வதந்தியையும் மக்கள் நம்ப வேண்டாம். அதுபோன்ற எந்த திட்டமும் இல்லைஎன போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
அரியலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலை மற்றும் குடிநீர் உள்ளிட்ட பல்வேறு புதிய திட்டப் பணிகளை போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இன்று துவங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்…
போக்குவரத்து கட்டண உயர்வு குறித்து வதந்தி பரவுவதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு,
தமிழகத்தில் அவ்வப்போது போக்குவரத்து கட்டண உயர்வு என வதந்தி பரவுவது வழக்கமாக உள்ளது. ஒவ்வொரு முறையும் வதந்தியை நாங்கள் மறுத்து வருகிறோம். அரசு பேருந்து கழகங்களை பொறுத்தளவு, பேருந்து கட்டண உயர்வு குறித்து எந்தவித திட்டமும் தமிழ்நாடு அரசிடம் தற்போதைக்கு இல்லை.
இப்பொழுதும் அதையே உறுதிப்படுத்துகிறோம். சாதாரண ஏழை, எளிய மக்களிடம் கட்டணச் சுமையை உயர்த்தக் கூடாது என மாண்புமிகு
முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். பேருந்து கட்டண உயர்வுக்கான சூழல் ஏற்பட்டபோதும், கட்டண உயர்வை மக்கள் மீது திணிக்காமல் அரசே ஏற்று, பேருந்து கழகங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.
பேருந்து கட்டண உயர்வு என்பது நிச்சயம் இருக்காது. மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என தெரிவித்தார் .
நடிகர் விஜய் தமிழ்நாட்டில் வாக்குகளை பிரிப்பதற்காகவே களமிறங்கப்பட்டுள்ளரா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு…
நேற்று அதிமுகவிலிருந்து திமுகவில் இணைந்த அன்வர் ராஜாவும் கூறியிருக்கிறார். பாஜகவின் கனவு என்ன என்பதை. அதிமுகவை முழுவதும் ஆக்கிரமித்து அந்த இடத்தை நிரப்புவதே பாஜகவின் கனவு. எனவே திமுகவின் வாக்குகளை பிரிக்கலாம் என்ற எண்ணத்தில் பல்வேறு புதிய கட்சிகளை பாஜக ஒவ்வொரு முறையும் தேர்தல் நேரத்தில் களத்தில் இறக்குவது வழக்கம். இப்பொழுதும் அந்த தந்திரத்தை புதுப்புது முயற்சிகளில் எடுத்துள்ளது. அனைத்தையும் முறியடித்து திமுக தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் வெற்றி பெறும்.
பாஜக என்னை விழுங்க நான் என்ன புழுவா? என கேட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமியின் பேச்சு குறித்த கேள்விக்கு…
அவர் ஒவ்வொரு முறையும் ஒன்றை பேசுவார். ஆனால் நடைமுறைக்கு வரும் பொழுது வேறு விதமாக இருக்கும். 2036 வரை பாஜகவுடன் கூட்டணி இல்லை என்ற எடப்பாடி பழனிச்சாமி, அமித்ஷாவுடன் மேடையில் அமர்ந்திருக்க இவர் வாய் கட்டி, வாய்மூடி மௌனியாக அமர்ந்திருந்தார். இப்பொழுது இவர் இதை பேசுகிறார். இன்னும் சில காலம் கழித்து என்ன பேசுவார் என்று காலம் நமக்கு உணர்த்தும் என தெரிவித்தார்.