கரூர் மாவட்டம் வெள்ளியணை அருகே ஜல்லிப்பட்டி பகுதியில் உள்ள ஆளில்லாத ரயில்வே லெவல் கிராசிங்கில், தனியார் பொறியியல் கல்லூரி (VSB) பேருந்து மீது சரக்கு ரயில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. மாணவர்களை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்த அந்தப் பேருந்து, தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இதில் பேருந்தில் பயணம் செய்த 20-க்கும் மேற்பட்ட மாணவர்களில், பலர் உடல் மற்றும் கை, கால்களில் பலத்த காயமடைந்தனர். விபத்து நடந்தவுடன் அருகில் இருந்த பொதுமக்கள் விரைந்து வந்து காயமடைந்த மாணவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து வந்த அமைச்சர் செந்தில் பாலாஜி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்த அவர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

