கடந்த ஜூலை 21 ம் தேதி துணை ஜனாதிபதி பதவியை ஜக்தீப் தன்கர் ராஜினாமா செய்தார். இதையடுத்து துணை ஜனாதிபதி தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக மகாராஷ்டிரா ஆளுநராக இருந்த சி.பி.ராதாகிருஷ்ணனும், ‘இந்தியா’ கூட்டணி சார்பில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.சுதர்சன் ரெட்டியும் நிறுத்தப்பட்டனர்.
இதையடுத்து துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இதில், தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் 452 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில், துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை காலை 10 மணிக்கு பதவியேற்க உள்ளார். ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் நிகழ்ச்சியில், ஜனாதிபதி திரவுபதி முர்மு அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.
இந்த விழாவில் பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், ஜே.பி.நட்டா மற்றும் மக்களவை, மாநிலங்களவையைச் சேர்ந்த மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர். தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டணிக் கட்சித் தலைவர்கள், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்களும் விழாவில் கலந்துகொள்கிறார்கள்.