கடந்த மாதம் சென்னை பனையூரில் நடந்த முதல்கட்ட சந்திப்பில் சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். இந்நிலையில், இன்று இரண்டாவது கட்டமாக செங்கல்பட்டு, அரியலூர், திண்டுக்கல், கடலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளுடன் சந்திப்பு மேற்கொண்டுள்ளார். சென்னை பனையூரில் இன்று விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்று வருகிறது. வந்திருந்த நிர்வாகிகள் அனைவருக்கும் மதிய உணவாக பிரியாணி
பரிமாறப்பட்டது. இதையடுத்து 3 மணி அளவில் மக்கள் இயக்க அலுவலகத்துக்கு கருப்பு நிற பேண்ட் ஷர்ட் அணிந்து வந்த விஜய்க்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்களுடன் மக்கள் இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்து விஜய் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியானது. அடையாள அட்டை வைத்துள்ள நிர்வாகிகளுக்கு மட்டும் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டது. ஆலோசனைக்கு பின் நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் தனித்தனியாக புகைப்படம் எடுத்துக்கொண்டார். மாற்றுதிறனாளி ஒருவர் விஜய்யுடன் புகைப்படம் எடுக்க வந்தார். அப்போது மாற்றுதிறனாளியை தூக்கி விஜய் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இது ரசிகர்களிடையே மனதை நெகிழ வைத்துள்ளது. இப்புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.