தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அடைக்கல ஆரோக்கியசாமி டேவிட் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கும்பகோணத்தார் தெரு பகுதியில் 5 பேர் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்தனர். அப்பகுதிக்கு போலீசார் விரைந்து சென்றனர்.
ஆனால் அதற்குள் 3 பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில் அவர்கள் தஞ்சை வடக்கு அலங்கத்தை சேர்ந்த தாமோதரன் மகன் அபி என்ற சிவனேசன் (19), வடக்கு வாசல் தங்கமணி என்பவரின் மகன் கணேசமூர்த்தி (30) என்பதும் , தப்பி ஓடியவர்கள் வடக்கு வாசல் பன்னீர்செல்வம் மகன் அருணாச்சலம் (25), கார்த்திக், கீழ அலங்கம் ராமலிங்கம் மகன் வெங்கடேஸ்வரன் (24) என்பதும் இவர்கள் கஞ்சா விற்பனை செய்ததும் தெரிய வந்தது. இதில் கணேசமூர்த்தி மீது 21 வழக்குகள் நிலுவையில் இருப்பதும் வெங்கடேஸ்வரன் மீது ஏழு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இருவரும் போலீசாரின் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அபி என்ற சிவனேசன், கணேசமூர்த்தி ஆகிய 2 பேரையும் கைது செய்து 1.600 கிலோ கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய அருணாச்சலம், கார்த்திக், வெங்கடேஸ்வரனை தேடி வருகின்றனர் .