Skip to content

சர்ச்சை பேச்சு… அண்ணாமலை மீது வழக்கு தொடர தமிழக அரசு அனுமதி..

சேலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ், சேலம் ஜேஎம் 4 நீதிமன்றத்தில் தமிழ்நாடு பாஜ மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவில், பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டு மக்களிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து பொய்யான தகவலை பரப்பி வருகிறார்.
அண்ணாமலை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மதுரையில் பேசும் போது, மீனாட்சி அம்மன் கோவிலில் 1956ஆம் ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சியின்போது முத்துராமலிங்க தேவர், அறிஞர் அண்ணாவை பார்த்து கடவுள் பக்தி இல்லாதவர்கள் கடவுள் பக்தி இருப்பவர்களை தவறாக பேசினால் மதுரை மீனாட்சி அம்மனுக்கு ரத்தத்தால் அபிஷேகம் செய்ய வேண்டி இருக்கும் என எச்சரிக்கை செய்தார் எனவும், இதனால் பி.டி.ராஜனும் அண்ணாவும் மன்னிப்புக் கேட்டுவிட்டு அங்கிருந்து ஓடி விட்டனர் எனவும் கூறியிருந்தார். ஆனால் முத்துராமலிங்கத் தேவர் அவ்வாறு கூறவில்லை என பத்திரிகைகள் தெரிவித்துள்ளன. அண்ணாமலை கூறிய தகவலுக்கான எந்த ஆதாரமும் இல்லை. பாஜக தலைவர் அண்ணாமலை இவ்வாறு இட்டுக் கட்டப்பட்ட கட்டு கதைகளை கூறி மக்களிடம் கலவரம், மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசி வருகிறார். எனவே அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி இருந்தார். அண்ணாமலை பேச்சு குறித்த ஆதாரங்களையும் சமர்ப்பித்திருந்தார். இந்த வழக்கு தொடர்பாக சேலம் 4வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதித்துறை நடுவர் யுவராஜ், அண்ணாமலை மீது இரண்டு பிரிவினருக்கிடையே மோதலை ஏற்படுத்தும் வகையிலான சட்டப்பிரிவின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், அரசின் அனுமதியை பெற வேண்டும் என உத்தரவிட்டார். இந்நிலையில் பியூஷ் மனுஷ் சேலம் நீதிமன்றத்தில் அளித்த புகாரின் பேரில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர முகாந்திரம் இருப்பதாக தமிழக அரசு முடிவு செய்து, வழக்கு தொடர்வதற்கான அனுமதி கோரி, ஆளுநருக்கு பரிந்துரை செய்த நிலையில், அண்ணாமலை மீது வழக்கு தொடர தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில், தமிழக அரசின் சார்பில் அண்ணாமலை மீது வழக்கு தொடர அனுமதி அளித்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இதன் நகல் சேலம் நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. ஓரிரு நாளில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும். அதன் பின்னர் அண்ணாமலை ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!