கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட்டது. கடந்த மாதம் 17ஆம் தேதியிலிருந்து சிபிஐ அதிகாரிகள் கரூர் வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலுச்சாமிபுரம் பகுதியில் உள்ள பொதுமக்கள், வியாபாரிகள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினருக்கு சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொண்டனர்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட நபர்களை மீட்கும் பணிக்காக வருகை புரிந்த தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களிடம் இன்று 6 வது நாளாக விசாரணை நடைபெற்றது.
ஏற்கனவே, 30க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில், 6-வது நாளாக தவெக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு பிரச்சார கூட்டத்திற்கு நாமக்கலில் இருந்து வந்த இரண்டு ஆம்புலன்ஸ்களின் ஓட்டுநர்கள் உரிமையாளர்கள் என 3 பேர் இன்று விசாரணைக்காக ஆஜராகி விசாரணை முடிந்து புறப்பட்டு சென்றனர்.
மேலும், தவெக பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்டு காயமடைந்த 5 நபர்கள் சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகினர். 6 மணி நேர விசாரணைக்கு பின்னர் புறப்பட்டு சென்றனர். நாளை மீண்டும் காயமடைந்த நபர்கள் சிபிஐ விசாரணைக்கு ஆஜராக உள்ளதாக தகவல் வந்துள்ளது.

