கடந்த ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி கரூர் அருகே வேலுச்சாமிபுரம் பகுதியில் தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்தனர்.
இந்த துயர சம்பவம் தொடர்பாக வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டு, தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கரூர் சுற்றுலா மாளிகையில் தங்கி உள்ள சிபிஐ அதிகாரிகள் சம்பவத்துடன் தொடர்புடைய பல தரப்பினரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், தவெக நிகழ்ச்சியில் ஏற்பாடுகள் பணியில் இருந்த தவெக நிர்வாகிகள் 10-க்கும் மேற்பட்டோர் கரூர் சுற்றுலா மாளிகையில் செயல்பட்டு வரும் சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகி உள்ளார்.
அவர்களிடம் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி பெறப்பட்ட விதம், பாதுகாப்பு ஏற்பாடுகள், கூட்டக் கட்டுப்பாடு, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து சிபிஐ அதிகாரிகள் விரிவாக கேள்விகள் எழுப்பி விசாரணை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் தேசிய நெடுஞ்சாலை அதிகாரி AD உட்பட நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஐந்து பேர் இன்று கரூர் சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகி உள்ளனர்.
அவர்களிடம் சாலை அனுமதி, தடுப்புகள் அமைத்தல், போக்குவரத்து மாற்று ஏற்பாடுகள், பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்பட்டதா என்பதைக் குறித்து சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக விசாரித்ததாக கூறப்படுகிறது.

