தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதால்: லாரி, ஆம்புலன்ஸ் முதல் என் வாகனமாக இருந்தாலும் சோதனையிடுங்கள் – கரூரில் எஸ்.பி. ஹரிகிரன் பிரசாத் காவல்துறையினருக்கு அறிவுறுத்தல்.
கரூர் தான்தோன்றிமலை பகுதியில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில், ஊர்க்காவல் படையினருக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஊர்க்காவல் படையினர், காவல்துறையினர் கலந்து கொண்டனர்,
கூட்டத்தில் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேர்தல் பணியின் போது பின்பற்ற வேண்டிய முக்கிய நடைமுறைகளை விளக்கினார்.
தேர்தல் விதிமுறைகள் அமலில் இருப்பதால், லாரிகள், ஆம்புலன்ஸ்கள், அரசு அதிகாரிகளின் வாகனங்கள் என எதையும் விட்டுவிடக்கூடாது. ஏன், என்னுடைய வாகனமாக இருந்தாலும் தாராளமாகச் சோதனையிடுங்கள்.
ஊர்க்காவல் படையினர் தனிச்சையாகச் செயல்படக்கூடாது. உள்ளூர் சட்டம் மற்றும் ஒழுங்கு போலீசாருடன் இணைந்தே பணியாற்ற வேண்டும். யாராவது தனிப்பட்ட முறையில் வேலை கொடுத்தால் உடனடியாகத் தலைமைக்குத் தெரிவிக்க வேண்டும்.
பொதுமக்களிடம் பேசும்போது மிகுந்த கனிவோடும், மரியாதையோடும் நடந்து கொள்ள வேண்டும். அதே சமயம் பணியில் கண்டிப்பும், நேர்த்தியும் அவசியம்.
அனைத்துக் காவலர்களும் கட்டாயம் ‘காவல் உதவி’ (Kaval Uthavi) செயலியைப் பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும். மேலும், ஒவ்வொரு வாகனச் சோதனையும் வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும்.
இந்தக் கூட்டத்தில் பயிற்சி டிஎஸ்பி மற்றும் ஏராளமான காவல்துறை அதிகாரிகள், ஊர்க்காவல் படையினர் கலந்து கொண்டனர்.

