சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளில் ஒரு முக்கிய மைல்கல்லாக, போரூர் முதல் வடபழனி வரையிலான 7 கி.மீ. வழித்தடத்தில் இன்று (ஜனவரி 11) சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. ஏற்கனவே பூந்தமல்லி – போரூர் இடையிலான 10 கி.மீ. தூரத்திற்குச் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்த நிலையில், அடுத்த கட்டமாக இந்தச் சோதனை இன்று காலை 11:00 மணியளவில் தொடங்குகிறது.
இந்த வழித்தடத்தின் சிறப்பம்சமே இது சென்னையின் முதல் இரட்டை அடுக்கு மெட்ரோ மேம்பாலம் (Double-decker corridor) ஆகும். இதில் கீழ் அடுக்கில் வாகனங்களும், மேல் அடுக்கில் மெட்ரோ ரயில்களும் செல்லும் வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காக கடந்த சில நாட்களாக சிக்னல் மற்றும் மின்மயமாக்கல் சோதனைகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், நேற்று கணினி சோதனைகளும் வெற்றிகரமாக முடிக்கப்பட்டன.
இந்த வழித்தடம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும்போது, ஆற்காடு சாலையில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசல் குறையும். குறிப்பாகப் பூந்தமல்லி மற்றும் போரூர் பகுதிகளில் இருந்து நகரின் மையப்பகுதிகளுக்குச் செல்லும் மக்களுக்குப் பயண நேரம் கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

