சென்னையில் திடீர் மழை, காற்று காரணமாக அங்கு தரையிறங்க முடியாமல் 2 விமானங்கள் திருச்சி வந்து பின்னர் புறப்பட்டுச் சென்றன.
தமிழகத்தில் அக்கினி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கியது. பொதுவாகவே கத்திரி வெயிலில் 100 டிகிரிக்கும் அதிகமான வெப்பநிலை நிலவுவதால் கடுமையான வெயில் பாதிப்பு ஏற்படுவது வழக்கம். ஆனால் அக்கினி நட்சத்திரம் தொடங்கிய நாளிலேயே மாநிலத்தில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்தது. இதில் சென்னையில் திடீர் மழை பலத்த காற்று மற்றும் மின்னலுடன் பெய்தது. இதனால் சென்னை விமான நிலையத்தில் சில விமானங்கள் தரையிறங்க முடியாத நிலைய ஏற்பட்டதையடுத்து வேறு விமான நிலையங்களுக்கு சில விமானங்கள் திருப்பி அனுப்பப் பட்டு நிலை சீரானதும் சென்னைக்கு சென்றன.
அந்த வகையில் சென்னை சென்ற இரு விமானங்கள் திருச்சி விமான நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை திருப்பி அனுப்பப் பட்டன. திருச்சியிலிருந்து பிற்பகல் 3 மணிக்கு சென்னைக்கு புறப்பட்ட இண்டிகோ விமானம் 79 பயணிகளுடன் சென்னை சென்றது. அங்கு விமான நிலையத்தில் நிலைமை சீராக இல்லாததால் அந்த விமானம் மீண்டும் திருச்சிக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது. திருச்சியில் மாலை 4.45 தரையிறங்கிய அந்த விமானம் மீண்டும் 5.45க்கு சென்னை புறப்பட்டுச் சென்றது. அதுபோல மதுரையிலிருந்து பகல் 2.30க்கு சென்னைக்கு 72 பயணிகளுடன் புறப்பட்ட இண்டிகோ விமானம் சென்னையில் தரையிறங்க முடியாமல், மாற்றி அனுப்பப் பட்டது. பின்னர் திருச்சியில் தரையிறங்கிய அந்த விமானம் மாலை 6 மணிக்கு திருச்சியிலிருந்து புறப்பட்டு சென்னை சென்றது. இதனால் ப.யணிகள் சற்று அவதிக்குள்ளாயினர்.
