Skip to content

சென்னை ரயில்கள் ரத்து.. ரயில்வே மெத்தனமாக செயல்பட கூடாது… கனிமொழி

சென்னையில் புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பணிக்குச் செல்வோர் கடுமையாக அவதிக்கு ஆளாகியுள்ளதாக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
தென்னக ரயில்வே இதற்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,
“நாள்தோறும் லட்சக்கணக்கானவர்கள் பயன்படுத்தும் சென்னை கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் கடந்த சில நாள்களாக பயணிகள் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டு வருவதும், அதனால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாவதும் வேதனையளிக்கிறது. ஏற்கனவே 40 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், இன்றும் 49 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருப்பது, அன்றாடம் பணிக்குச் செல்வோர் தொடங்கி பள்ளி, கல்லூரி மாணவர்கள் வரை கடும் மனவுளைச்சலுக்கு ஆளாக்கி உள்ளது.
குறிப்பாக வரும் வாரங்களில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கவுள்ள நிலையில், தென்னக ரயில்வே மெத்தனமாக செயல்படாமல் இப்பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார் .
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் புறநகர் ரயில்கள் இயக்கப்பட்டு வந்த நடைமேடை 10 மற்றும் 11-ல் கடந்த 20 ஆம் தேதி முதல் மறுசீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக ஏப்ரல் 5 வரை 45 நாள்களுக்கு புறநகர் ரயில்கள் நடைமேடை 5 மற்றும் 6-ல் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, சென்னை கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்பட்டு வந்த 204 மின்சார ரயில் சேவைகளை 164 ஆகக் குறைப்பதாக அறிவிக்கப்பட்டு, அதன்படி கடந்த 4 நாள்களாக இயக்கப்பட்டு வந்தன.
சென்னை கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் மேலும் 49 ரயில் சேவைகளை இன்று முதல் குறைப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை புறநகர்ப் பகுதிகளில் இருந்து நாள்தோறும் பணிக்குச் சென்று திரும்பும் லட்சக்கணக்கானோர் கடும் சிரமத்துக்குள்ளாகினர். தேர்வு காலத்தில் மாணவர்களும் நேரத்துக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல முடியாத நிலை உருவாகி உள்ளது.

error: Content is protected !!