பாமக நிறுவனர் ராமதாஸ், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். முதலில் வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று கூறப்பட்டது.
ஆனால், இன்று காலை அவருக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “நேற்றைய தினம் தந்தை ராமதாஸ் இதயம் தொடர்பான பரிசோதனைக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று காலை அவருக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டது. அந்த பரிசோதனையில் ரத்த குழாய்கள் சிறப்பாக செயல்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால், பயப்படுவதற்கு எதுவும் இல்லை. அவருக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. இன்னும் இரண்டு நாள்கள் மருத்துவமனையில் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுரை வழங்கி உள்ளனர்,” என்று அன்புமணி ராமதாஸ் கூறினார்.
மேலும், “அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதால் இதுவரை அவரை நேரில் சந்திக்கவில்லை எனவும், அடுத்த 6 மணிநேரத்திற்கு ராமதாஸ் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பார் எனவும், அதன் பிறகு பொது அறைக்கும் மாற்றப்படுவார்” என்றும் அன்புணி கூறினார்.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாமக நிறுவனர் ராமதாசை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து அவரிடம் விசாரித்தார். இதனையடுத்து, ஏற்கனவே அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள மதிமுக கட்சி தலைவர் வைகோவையும் முதல்-அமைச்சர் சந்தித்து நலம் விசாரித்தார்.