ஓசூர் அருகே ஜூஜூவாடி சோதனைச்சாவடி அருகே போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இருந்து வந்த ஒரு காரை சோதனைக்காக போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
ஆனால், ஓட்டுநர் காரை நிறுத்தாமல், தலைமை காவலர் ராஜீவ் காந்தி (48) மீது இடித்து விட்டுச் சென்றுள்ளார். அதில், தடுமாறிய போலீஸ் ஏட்டு ராஜீவ் காந்தி காரின் முன் பக்க பேனட்டில் விழுந்துள்ளார். அதையும் பொருட்படுத்தாத அந்த நபர் காரை, வேகமாக இயக்கி சென்றுள்ளார். கிட்டத்தட்ட 4 கிலோ மீட்டர் தூரம் அந்த நபர் காரை ஓட்டி சென்றுள்ளார்.
தகவலறிந்த ஓசூர் சிப்காட் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் சையத் முபாரக் தலைமையிலான போலீசார், அந்த காரை விரட்டி சென்றனர். சினிமா படப் பாணியில் நடந்த இந்த சம்பவம் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியது.தொடர்ந்து, ஓசூர் தர்கா பகுதியில் பொதுமக்களின் உதவியுடன் போலீசார் அந்த காரை மடக்கிப் பிடித்தனர். இந்த சேஸிங் சம்பத்தில், காரின் முன்பக்கம் சேதமடைந்ததுடன், ஏட்டு ராஜீவ் காந்திக்கு காலில் எலும்பு முறிவும் ஏற்பட்டுள்ளது. ஏட்டு ராஜீவ் காந்தியை மீட்ட போலீசார் சிகிச்சைக்காக, அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அப்போது காரில் இருந்த அந்த நபர் மீண்டும், அங்கு நின்ற போலீசார் இடித்து விட்டு தப்ப முயன்றுள்ளார். ஆனால், சுதாரித்துக் கொண்ட போலீசார் அவரை பிடித்து கைது செய்தனர். விசாரணையில், அவர் ஓசூர் காளேகுண்டா பகுதியை சேர்ந்த யாரப் பாஷா (34) என்பது தெரிய வந்தது.
அந்த சொகுசு காரில் ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள 390 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் 48 மதுபான பாட்டில் இருந்தது தெரியவந்தது. அதையடுத்து, காரை மற்றும் பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், யாரப் பாஷாவிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

