தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூரில் இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இதற்கான விழா புதிய பஸ் நிலையம் அருகே உள்ள திடலில் நடந்தது. இந்த விழாவில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், நிறைவேற்றப்பட்ட திட்டங்களை தொடங்கி வைத்தும் முதல்வர் ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
நான் ஆரூர்காரர் மகன் மட்டுமல்லாமல், அவரது கொள்கை வாரிசாக இந்த விழாவில் பங்கேற்கிறேன்.
உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி, பெருமை. திருவாரூர் என்றால், தலைவர் கலைஞரும், திருவாரூர் தேரும் தான் நினைவுக்கு வரும். இந்த மண்ணில் பிறந்த கலைஞர்- தான் தொட்ட துறையில் எல்லாம் வெற்றி பெற்று, தன்னுடைய நிர்வாக திறனால் இந்த மாநிலத்தை உருவாக்கினார்.
நான் மற்ற மாவட்டங்களில் பேசும்போது உங்களில் ஒருவன் என்று சொல்வது உண்டு. ஆனால் திருவாரூர் மக்கள் தான் என்னை எங்களில் ஒருவர் என சொல்கிறார்கள். இந்த ஆட்சி கலைஞர் ஆட்சியின் நீட்சிதான். நம்முடைய தம்பிமார்கள் ஒவ்வொரு துறைகளிலும் திறமைசாலிகள் என அண்ணா சொல்வார். அதுபோல அமைச்சர்களில் எல்லோரும் திறமைசாலிகளாகஇருந்தாலும், தம்பி டிஆர்பி ராஜா திறமையில் உயர்ந்து நிற்கிறார். நான் அவர் உயரத்தை மட்டும் சொல்லவில்லை.
உழைப்பு, சாதனையால் ஏராளமான தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் பெருகுது. வேலை வாய்ப்புகள் பெருகுது. தொலைக்காட்சிகளுக்க டிஆர்பி ரேட் என்பார்கள். நம்முடைய திராவிட மாடல் ஆட்சியின் தொழில் வளர்ச்சியை டிஆர்பி ராஜாவின் செயல்பாட்டை வைத்து கணிக்கலாம். அவருக்கு என் பாராட்டு.
பூண்டி கலைவாணன், கலைஞருக்கு செல்ல பிள்ளையாக பொறுப்பாக செயல்படுகிறார். அவருக்கும் பாராட்டு வாழ்த்துக்கள்.
திருவாரூர் மாவட்டத்தை உருவாக்கியவர் கலைஞர், புதிய கலெக்டர்ஆபீஸ், எஸ்.பி. அலுவலகம், புதிய பஸ் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டியவர் கலைஞர். அனைத்தும் கலைஞரால் உருவானது. திருவிக அரசு கலைக்கல்லூரி கொண்டு வந்தவர். மத்திய பல்கலைக்கழகம் கொண்டு வந்தவர். திருவாரூர் மருத்துவ கல்லூரி, மன்னை அரசு கல்லூரி, செம்மொழி எக்ஸ்பிரஸ் விடப்பட்டதும் கழகத்தின் முயற்சி தான். திமுக ஆட்சியில் இந்த மாவட்டத்திற்கு ஏராளமான திட்டங்கள் கொண்டு வரப்பட்டன.
திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் ஆடிப்பெருக்கு போல திருவாரூர் மாவட்டத்தில் மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடும். மற்ற ஆட்சியில் அது வறண்டு விடும். திருவாரூர் மாவட்டத்தில் திமுக ஆட்சியால் பயனடைந்த விவசாயிகள் ஏராளம். மேட்டூர் அணை திமுக ஆட்சியில் ஜூன் 12ல் திறக்கப்படுகிறது. அதை நானே திறந்து வைத்தேன்.
என்னுடைய சொந்த மாவட்டத்திற்கு அறிவிப்பு செய்யாமல் செல்ல மாட்டேன். திருவாரூரில் ரூ.11 கோடியில் புதிய வணிக வளாகம் அமைக்கப்படும். நன்னிலம் வட்டத்தில் அனைத்து வசதிகளுடன் மாதிரி பள்ளி அமைக்கப்படும்.
மன்னார்குடியில் புதிய அறிவியல் கல்லூரி அமைக்கப்படும்.
ஆறுகள், வடிகால்கள், ரெகுலேட்டர்கள் ரூ.43 கோடியில் சீரமைக்கப்படும். நன்னிலத்தில் புறவழிச்சாலை அமைக்கப்படும்.
நெல் ஜெயராமனை போற்றும் வகையில் திருத்துறைப்பூண்டியில் அவருக்கு சிலை அமைக்கப்படும்.
தொடர்ந்து சாதனை செய்வோம். இதனை தாங்க முடியாத எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தை மீட்போம் என பயணம் செய்கிறார். அதிமுகவை மீட்க முடியாதவர், தமிழகத்தை மீடக்போகிறாராம். உங்களிடம் இருந்து தமிழகம் போய்விட்டது. எடப்பாடியிடம் இருந்து நாங்கள் தமிழகத்தை மீட்டு விட்டோம். தமிழ்நாடு என்று சொல்லக்கூடாது என நினைககும் கூட்டத்தோடு அவர் சேர்ந்து விட்டாார். ஆட்சியில் அமர்த்தியவரையே கட்சியில் இருந்து வெளியேற்றினீர்கள். துரோகம் செய்வது மட்டும் தான் அவருக்கு தெரியும். கொஞ்சம், நஞ்சமல்ல, நீங்கள் தமிழ்நாட்டுக்கு செய்த துரோகத்தால், தமிழ்நாட்டையும், உரிமையையும் அடகு வைத்தீர்கள். தமிழ்நாட்டில் உரிமைகளை பறித்து விட்டது பாஜக.
இன்று இந்தியாவில் நம்பர் 1 ஆட்சி திமுக தான் என ஒன்றிய அரசு சொல்லி உள்ளது. அவர்களால் கூட மறுக்க முடியவில்லை. வெளிநாட்டு மக்கள் எல்லாம் பெருமையோடு பேசுகிறார்கள். இது உங்களுக்கு எங்கே தெரியபோகிறது. உங்களுக்கு தெரிந்தது துரோகம் தான். துரோகம் செய்து கூட்டணி வைத்தீர்கள். தமிழ்நாட்டு உரிமைகளை அடகுவைத்து துரோகம் செய்தீர்கள். மத்திய அரசு நமக்கு நிதி தர வில்லை, சிறப்பு திட்டம் கிடையாது. ஒன்றிய அரசு திட்டங்களுக்கு நாம் தான் நிதி கொடுக்கிறோம்.
கல்வி நிதி, நமக்கு தரவில்லை. கீழடி ஆய்வறிக்கை வெளியிட மறுக்கிறார்கள். தொகுதி மறுவரையறை, வாக்களார் பட்டியல் குளறுபடி. செய்கிறார்கள். அவர்களுடன் கூட்டணி வைத்திருக்கிறீர்கள். எடப்பாடி கூச்சமின்றி, வாய்க்கு வந்தபடி பேசுகிறார்.
இந்து சமய அறியைய்துறை சார்பில் கல்லூரி கட்டக்கூடாது என்கிறார். இது வரை பாஜகவுக்கு டப்பிங் வாய்தான் கொடுத்தார். இப்போது ஒரிஜினல் வாய்ஸ் கொடுக்கிறார். அறநிலையத்துறை நிதியில் கல்லூரி கட்டலாம். இதற்கு சட்டமே இருக்கு. பக்தவச்சலம் காலத்தில் இருந்து இது நடைமுறையில் உள்ளது. இது தெரியாமல் எப்படி முதல்வராக இருந்தீர்கள்.? எம்.ஜிஆர் பழனியில் அறநிலையத்துறை பாலிடெக்னிக் திறந்தார். அதன் கூடுதல் கட்டத்தை நீங்கள் திறந்தீர்கள். அதை மயக்கத்தில் திறந்தீர்களா, பாஜகவே இப்படி பேசவில்லை. பழனிசாமி பேசுகிறார்.
நகைச்சுவை நடிகர் வடிவேலு நடித்த நகைச்சுவை காட்சியில் சொல்லுவார், கொடுத்த காசுக்கு மேல என்னமா கூவுறான் என்பார். அதுபோல இப்போது எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். திராவிட மாடல் அரசு செய்த சாதனை லிஸ்ட் பெருசு. கல்வி என்றால் ஏன் உங்களுக்கு கசக்கிறது.
கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் அமைப்போம் என சட்டம் இயற்றினோம். கவர்னர் அனுமதி தரவில்லை. இதைவிட கவர்னகு்க என்ன வேலை,? நீங்கள் ஒன்றிய அரசிடம் கேட்காவிட்டாலும், உறுதியாக சட்டப்படி பல்கலைக்கழகம் அமைப்போம். மக்களுக்கு எதிரான கருத்துக்களை பேசி, மக்களை ஏமாற்றவிடமலாம் என நீங்கள் நினைத்தாலும் மக்கள் உங்களை ஏற்கமாட்டார்கள். மக்கள் ஒற்றுமையாக நிற்கணும் மண், மொழி, மானம் காக்க மண்ணின் மைந்தனான, கருணாநிதியின் கொள்கை வாரிசான நான் உங்களுக்கு எப்போதும் துணை நிற்பேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் அமைச்சர்கள் கே. என். நேரு, பன்னீர்செல்வம், மகேஸ், டிஆர்பி ராஜா, மெய்யநாதன் , கோவி. செழியன், எம்.பிக்கள் செல்வராஜ், முரசொலி, மற்றும் எம்.எல்.ஏக்கள், அதிகாரிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.