தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 2 நாள் பயணமாக இன்று காலை 11.30 மணி அளவில் திருச்சி வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு அமைச்சர் கே. என். நேரு தலைமையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் மாநகர மேயர் அன்பழகன், கலெக்டர் பிரதீப் குமார், மற்றும் சிவா எம்.பி, எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு வரவேற்பு அளித்தனர்.
வரவேற்பு முடிந்ததும் முதல்வர் விருந்தனர் மாளிகைக்கு புறப்பட்டு சென்றார். சிறிது நேரத்தில் அங்கிருந்து துவாக்குடி சென்ற, அங்கு ரூ.19.65 கோடியில் கட்டப்பட்ட அரசு மாதிரி பள்ளியையும், விடுதியையும் திறந்து வைத்தார். பின்னர் பள்ளியின் பல வகுப்பறைகளுக்கு சென்று பார்வையிட்டார். அங்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து முதல்வருக்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். இதில் அமைச்சர்கள் நேரு, அன்பில் மகேஷ், ரகுபதி, திருச்சி சிவா, கலெக்டர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் அங்கு நடந்த காணொளியையும் முதல்வர் பார்வையிட்டார்.
பள்ளிவளாகத்தில் திருவள்ளுவர் சிலையையும் முதல்வர் திறந்து வைத்தார். ஸ்ட
மாலையில் திருச்சி தலைமை மருத்துவமனை அருகில் நடிகர் திலகம் சிவாஜி சிலையை திறந்து வைக்கிறார்.
இரவு 7 மணிக்கு கலைஞர் அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் நடத்துகிறார். வரும் சட்டமன்ற தேர்தல் பணி குறித்து அப்போது அவர் ஆலோசிக்கிறார். இதற்காக முதல்வர் செல்லும் வழியில் ஆங்காங்கே முதல்வருக்கு வரவேற்பு அளிக்க ஏற்பாடு பொதுமக்கள், திமுகவினர் சார்பில் செய்யப்பட்டு உள்ளது.
நாளை காலை திருச்சி பஞ்சப்பூரில் ரூ.408.36 கோடியில் கட்டப்பட்டுள்ள பிரமாண்ட பேருந்து நிலையத்தை முதல்வர் திறந்து வைக்கிறார். பின்னர் 55 ஆயிரம் பேருக்கு நலத்திட்டங்களையும் முதல்வர் வழங்குகிறார்.
நாளை முதல்வர் திறந்து வைக்கும் பஸ் நிலையம் பல சிறப்பு அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
தினமும் 3,200 க்கும் மேற்பட்ட பேருந்துகளை கையாளும் திறனைக் கொண்ட வகையில், குளுகுளு வசதியுடன் இந்த பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இரண்டு நிலை அமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ள இதில், மொபசல் (வெளியூர் பஸ்கள்) பேருந்துகள் தரை மட்டத்தில் இயக்கப்படுவதால், நகர பேருந்துகள் முதல் தளத்தில் இயக்கப்படும் வகையில் சீரான போக்குவரத்து செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
401 பேருந்து நிறுத்துமிடங்கள் உள்ள இந்த மையத்தில், நீண்ட தூரம், குறுகிய தூரம் மற்றும் நகர பேருந்துகள் என தனித்தனியாக இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. பயணிகள் வசதிக்காக பல்வேறு சிறப்பு அம்சங்கள் கொண்ட இந்த பேருந்து முனையம் ஏறவும் இறங்கவும் எஸ்கலேட்டர் வசதி செய்யப்பட்டுள்ளது.
பெண்களுக்கு 81, ஆண்களுக்கு 52 கழிப்பறைகள் மாற்றுத் திறனாளிகளுக்காக 4 மற்றும் திருநங்கை பிரிவுக்காக 2 தனி கழிப்பறைகள்173 சிறுநீர் கழிவறைகள் மற்றும் 21 குளியல் அறைகள் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
வர்த்தக கடைகள், காத்திருப்பு மண்டபங்கள் மற்றும் ஆட்டோ நிறுத்தங்கள்
இவை அனைத்தும் கட்டமைக்கப்பட்டுள்ளன, இது தமிழ்நாட்டில் முதன்முறையாக உள்ளே உள்ள கடைகள் மற்றும் உணவக பகுதிகளில் குளிர்சாதன வசதியுடன் அறிமுகமாகும் கட்டமைப்பு கொண்ட பேருந்து நிலையம்
இந்த புதிய பேருந்து நிலையத்திற்கும் நகர மையத்திற்கும் இடையிலான தொடர்பை மேம்படுத்தும் வகையில், 9.8 கிலோமீட்டர் நீளமுள்ள இணைப்பு சாலை உருவாக்கப்படுகிறது.
இதன் முதல் கட்டத்திற்கு ரூ.81.7 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்த திட்ட மதிப்பு ரூ.367 கோடியாகும். இதில் மேம்பாலம், பாதசாரிகள் நடைபாதை, மழைநீர் வடிகால் போன்ற அம்சங்களும் இடம்பெறுகின்றன.
இந்த நிலையில், 1972 ம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்த பழைய மத்திய பேருந்து நிலையம் வணிக வளாகமாக மாற்றப்பட உள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது. வர்த்தக வளாகங்கள், அலுவலகங்கள் மற்றும் பொழுதுபோக்கு மையங்கள் என்பவற்றுடன் கூடிய வடிவமைப்புக்கான ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், அதன் பரப்பளவு, நவீன தொழில்நுட்பம் மற்றும் பயணிகளுக்கேற்ப வழங்கப்பட்ட வசதிகள் மூலம், இந்திய அளவில் புதிய மாறுதலான போக்குவரத்து வசதிகளை உருவாக்கிய முன்னோடி மாநகரமாக திருச்சி விளங்கும் என்பதில் ஐயமில்லை.