பு துக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், தோட்டக்கலை – மலைப்பயிர்கள் துறை சார்பில், தென்னை சாகுபடியில் நவீன தொழில் நுட்பங்கள் மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்த மாவட்ட அளவிலான கருத்தரங்கம் இன்று நடந்தது. கலெக்டர் அருணா இதனை துவக்கி வைத்து, அங்கு அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை பார்வையிட்டார்.
கருத்தரங்கில் கலெக்டர் அருணா பேசியதாவது:
தென்னை சாகுபடி பரப்பை அதிகரிக்கவும், அவற்றின் மூலம் வியசாயிகளின் வருமானத்தை னத்தை பெருக்கி அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவதற்கான நோக்கத்தில் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின்கீழ், மாவட்ட அளவிலான தென்னை சாகுபடி குறித்த தொழில்நுட்ப கருத்தரங்கம் புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் நடத்தப்படுகிறது.
எனவே, விவசாயிகள் அனைவரும் தமிழக அரசின் மூலம் வேளாண்மை வளர்ச்சிக்காக செயல்படுத்தப்படும் இதுபோன்ற நடவடிக்கைகளை உரிய முறையில் கடைபிடித்து, ஆரோக்கியமான மரக்கன்றுகள் மற்றும் மரங்களை வளர்த்து வேளாண்மையில் சிறந்து விளங்கிட வேண்டும்.
இந்தக் கருத்தரங்கத்தில் வேளாண் ஆராய்ச்சியாளர்கள், தென்னை சாகுபடி தொழில்நுட்பம், ஊடுபயிர் சாகுபடி, நுண்ணூட்டச் சத்து மேலாண்மை, தென்னை நோய் மற்றும் பூச்சி மேலாண்மை, தென்னையில் மதிப்பு கூட்டுதல் மற்றும் பயன்பாடுகள் உள்ளிட்டவைகள் குறித்து விவசாயிகளுடன் கலந்துரையாட உள்ளனர்.
இந்தியாவில் கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ஆந்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் தென்னை அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் தோட்டக்கலை மலைப்பயிரான தென்னை விவசாயிகளால் 14,155 எக்டர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டு வருகின்றது.
தென்னையில் நெட்டை, குட்டை, குட்டை X, நெட்டை கலப்பின ரகங்கள் பயிரிடப்படுகிறது. இவற்றுள் கோடைகாலத்தில் தாகத்தை தணிக்கும் வகையில் இளநீருக்காக குட்டை ரக தென்னங்கன்றுகளும் மற்றும் உயர்தர மதிப்பு கூட்டுப் பொருட்களின் தரத்திற்காக நெட்டை ரக தென்னங்கன்றுகளும் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றது. மேலும், தென்னை நார் கழிவுகள் மற்றும் மட்டைகளை தூளாக்கி பயிர்களுக்கு உரமாகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
தென்னை சாகுபடியின் போது ஊடுபயிராக வாழை, காய்கறிகள் மற்றும் கீரை வகைகள் ஆகியவை சாகுபடி செய்வதால் விவசாயிகள் கூடுதலாக வருமானம் ஈட்டும் வாய்ப்பு கிடைக்கிறது. தென்னையில் மகசூலினை அதிகரிக்க தேனீக்களின் பங்கு இன்றியமையாததாக உள்ளது. எனவே, மகரந்த சேர்க்கைக்கு தேனீக்கள் முழுமையாக உதவி புரிகிறது. மேலும் இதன் மூலம் கூடுதலாக வருமானமும் விவசாயிகள் பெறலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில் , இணை இயக்குநர் (வேளாண்மை) .மு.சங்கரலட்சுமி, துணை இயக்குநர் (தோட்டக்கலை) அ.ரேகா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.